விளையாட்டு

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

JustinDurai

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறும் அணி எது என்பதை தீர்மானிக்கும் ‘குவாலிஃபயர் 1’ ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் இன்று மோதுகின்றன.

ஐபிஎல் லீக் சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு  முன்னேறியுள்ளன.  அதில் இன்று நடக்கும் முதல் ‘தகுதிச் சுற்று’ (Qualifier 1) ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி 2வது குவாலிஃபயர் சுற்றில் விளையாட வேண்டும்.

அறிமுக சீசனிலேயே புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றில் களமிறங்குகிறது குஜராத். அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா (413 ரன்கள்), சுப்மான் கில் (403 ரன்கள்), டேவிட் மில்லர் (381 ரன்கள்), விருத்திமான் சஹா (312 ரன்கள்) நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். பந்து வீச்சில் ரஷித் கான் (18 விக்கெட்டுகள்), முகம்மது ஷமி (18 விக்கெட்டுகள்), லாக்கி பெர்குசன் (12 விக்கெட்டுகள்) பலம் சேர்க்கின்றனர். பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்த குஜராத், இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  .

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி நடப்புத் தொடரில் விளையாடிய 14 ஆட்டங்களில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை தனதாக்கி பிளே ஆஃப் சுற்றை எட்டியது. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பியும் ராஜஸ்தான் அணி வீரர்கள் வசம்தான் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிவரும் ஜோஸ் பட்லர் இதுவரை பங்கேற்ற 14 போட்டிகளில் 3 அரை சதங்கள், 3 சதங்கள் உட்பட 629 ரன்களை குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார். அதேபோல் 14 ஆட்டங்களில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார்.

இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய லீக் ஆட்டத்தில் குஜராத் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைய ராஜஸ்தான் அணி கடுமையாக போராடும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

குஜராத் டைட்டன்ஸ்: 1.ஷுப்மான் கில், 2.விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), 3.மேத்யூ வேட், 4.ஹர்திக் பாண்டியா (கேப்டன்), 5.டேவிட் மில்லர், 6.ராகுல் தெவாடியா, 7.ரஷித் கான், 8.ஆர் சாய் கிஷோர், 9.முகமது ஷமி, 10.லாக்கி பெர்குசன், 11.யாஷ் தயாள்

ராஜஸ்தான் ராயல்ஸ்: 1.ஜோஸ் பட்லர், 2.யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3.சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 4.தேவ்தத் படிக்கல், 5.ஷிம்ரோன் ஹெட்மியர், 6.ரியான் பராக், 7.ஆர் அஷ்வின், 8.டிரென்ட் போல்ட், 9.ஓபேட் மெக்காய், 10.யுஸ்வேந்திர சாஹல், 11.குல்தீப் சென்

இதையும் படிக்கலாம்: சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்