விளையாட்டு

ரபாடா பந்துவீச்சில் சிக்கி தடுமாறிய குஜராத்! பஞ்சாப்பிற்கு 144 ரன்கள் இலக்கு

ரபாடா பந்துவீச்சில் சிக்கி தடுமாறிய குஜராத்! பஞ்சாப்பிற்கு 144 ரன்கள் இலக்கு

ச. முத்துகிருஷ்ணன்

ரபாடாவின் ரணகளப் பந்துவீச்சில் சிக்கி தடுமாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 144 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் தரப்பில் ஓப்பனர்களாக விருத்திமான் சஹா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரில் பவுண்டரி விளாசி குஜராத் ரன் கணக்கை துவக்கி வைத்தார் சஹா. அடுத்து ரபாடா வீசிய ஓவரில் சஹா, கில் இருவரும் இணைந்து 3 பவுண்டரிகளாக விளாச, குஜராத் ஸ்கோர் வழக்கம்போல விறுவிறுவென எகிறத் துவங்கியது. ஆனால் குஜராத்தின் எழுச்சியை கில்லை ரன் அவுட் செய்ததன் மூலம் முடக்கினார் ரிஷி தவான்.

ஆனால் சஹா தன் அதிரடியை தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசிக் கொண்டிருந்தபோது, ரபாடா பந்துவீச்சில் சிக்கி அவுட்டாகி வெளியேறினார். அடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் பொறுமையாக விளையாடத் துவங்கினார். ஆனால் ஹர்திக் பாண்டியா 7 பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன் எடுத்த நிலையில் ரிஷி தவான் பந்துவீச்சில் சிக்கி அவுட்டாக குஜராத் தள்ளாடத் துவங்கியது.

அடுத்து வந்த டேவிட் மில்லரும் சுதர்சனுடன் இணைந்து தடுப்பாட்டத்தை விளையாடத் துவங்கினார். இருவரும் மிகப் பொறுமையாக விளையாடியதால் ஸ்கோரும் மந்தமாக நகரத் துவங்கியது. 4 ஓவர்கள் வரை பவுண்டரி சிக்ஸர்களாக விளாசிய குஜராத் அணி, அடுத்த 7 ஓவர்களுக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரைக் கூட அடிக்க இயலவில்லை.

இந்த இக்கட்டான நிலையில் மில்லரும் லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் சிக்கி நடையை கட்ட, ராகுல் தெவாட்டியாவுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினார் சாய் சுதர்சன். ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டி சுதர்சன் ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தார். ஆனால் ரபாடாவிடம் சிக்கி தெவாட்டியா அவுட்டாகி வெளியேற, அடுத்த பந்திலேயே அவுட்டாகி நடையைக் கட்டினார் ரஷீத் கான்.

பிரதீப் சங்வான், பெர்குசன் ஆகியோர் பேட்டிங் ஆட வந்து பெவிலியனுக்கு பேஷன் ஷோ நடத்த, தனியாளாக போராடி அரைசதம் கடந்து சாய் சுதர்சன் ஒன் மேன் ஷோ நடத்தி அசத்தினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் குஜராத அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது. நடப்பு சீசனில் குஜராத் அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

பஞ்சாப் தரப்பில் ரபாடா 33 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். நடப்பு சீசனில் எல்லா அணிகளும் டாஸ் வென்று 2வது பேட்டிங் செய்து வெற்றியை குவித்து வந்த வேளையில், முதலில் பேட்டிங் செய்து டிபண்ட் செய்து வெற்றியை ருசித்த முதல் அணி குஜராத் டைட்டன்ஸ்! அந்த சாதனையை இம்முறையும் அந்த அணி நிகழ்த்துமா? குஜராத் பவுலர்கள் பஞ்சாப் பேட்டிங்கை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்து அமையும்!