விளையாட்டு

அதிரடி காட்டியும் முடியலையே: வெளியேறியது குஜராத்

அதிரடி காட்டியும் முடியலையே: வெளியேறியது குஜராத்

webteam

அதிரடி ஆட்டம் மூலம் 208 ரன்கள் எடுத்தும் தோல்வியை தழுவியது குஜராத் அணி. இதையடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து இந்த அணி வெளியேறியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியும் குஜராத் அணியும் நேற்று மோதின. டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் பொறுப்பு கேப்டன் கருண் நாயர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ரெய்னாவும், தினேஷ் காத்திக்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுரேஷ் ரெய்னா 43 பந்துகளில் 77 ரன்களும், தினேஷ் கார்த்திக் 65 ரன்களும் விளாசினர். இவர்களின் விளாசலை அடுத்து அந்த அணி, 208 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் ரபடா, கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

209 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய டெல்லி அணியும் தொடக்கம் முதலே ரன்குவிப்பில் ஈடுபட்டது. இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்களான சஞ்சு சாம்சனும், ரிஷப் பான்ட்டும் சிக்சர்களாக விளாசி, கு‌ஜராத் அணி பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தனர். சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். 27 பந்துகளில் அரைசதமடித்த ரிஷப் பான்ட், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 18-வது ஓவரிலேயே டெல்லி அணி வெற்றி இலக்கை எட்டியது. டெல்லி அணியின் ரிஷப் பான்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நடப்புத் தொடரில் 8-வது தோல்வியை சந்தித்த குஜராத் அணி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.