விளையாட்டு

ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!

ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!

ச. முத்துகிருஷ்ணன்

ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கைடானோ 7 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் இன்னசென்ட் கையா 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். கேப்டன் ரெஜிஸ் சகாப்வா மற்றும் வெஸ்லி மாதேவெரே தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சீன் வில்லியம்ஸ் தீபக் ஹூடா பந்துவீச்சில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் வெறும் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய சுப்மான் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய தவான் 33 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 6 ரன்களுக்கு நடையைக் கட்ட சுப்மான் கில்லும் 33 ரன்களில் வெளியேறினார். பின்னர் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.