விளையாட்டு

சச்சினுடன் உலகக் கோப்பை போட்டியை ரசித்த சுந்தர் பிச்சை

webteam

இந்தியா-இங்கிலாந்து போட்டியை கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையுடன் சச்சின் டெண்டுல்கர் நேரில் கண்டுகளித்துள்ளார். 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஜெசன் ராய்(66), பாரிஸ்டோவ்(111), ஸ்டோக்ஸ்(79) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 337 ரன்கள் குவித்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. பின்னர் ஒரளவு நிலைத்து ஆட முற்பட்டது. இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 306 ரன்கள் குவித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்தப் போட்டியை நேற்று நேரில் காண கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை நேரில் வந்துள்ளார். இது தொடர்பான நிழற்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில். “இன்றைய போட்டியில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மற்றும் சச்சின் ஆகிய இருவரும் ஒன்றாக மைதானத்தில் இருந்தனர்” எனப் பதிவிட்டுள்ளது. 

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர் பிச்சை, “இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து விளையாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய இளம் வயதில் நான் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அப்போது நான் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை எனது முன்னுதாரணமாக கொண்டிருந்தேன்” எனக் கூறியிருந்தார்.