விளையாட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்ற தமிழக வீராங்கனை..!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்ற தமிழக வீராங்கனை..!

webteam

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதன்மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை கோமதி மாரிமுத்து பெற்றுத்தந்துள்ளார். ஆரம்பத்தில் கோமதி சற்று பின் தங்கி இருந்தார். பின்னர் தனது அபார ஓட்டத்தினால் சீன வீராங்கனை வாங் சுன்யு வை தோற்கடித்தார்.

இதுகுறித்து கோமதி மாரிமுத்து கூறுகையில், “நான் முடிவு கோட்டை முதலாவதாக கடந்து தங்கப்பதக்கம் வென்று விட்டேன் என்பதை என்னால் உணர முடியவில்லை. கடைசி 150 மீட்டர் தூரம் மிகவும் கடினமாக இருந்தது” என தெரிவித்தார்.

ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து தமிழகத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருச்சி. ஏழ்மையான சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

இவர் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் 20 வயது முதலேயே தீவிர பயிற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். தற்போது பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் 2013/ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 7-வது இடத்தையும் 2015-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4-வது இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.