உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறியிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், தனது முடிவை இப்போது மாற்றியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் (39). உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறப் போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளார். உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை இன்று சந்திக்கிறது.
இதையடுத்து செய்தியாளர்களை நேற்று சந்தித்த கெய்ல் கூறும்போது, ’’எனது கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. உலக கோப்பை தொடருக்குப் பின்னும் விளையாட இருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடுவேன். டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பிருக்கிறது. ஆனால் டி20 தொடரில் விளையாட மாட்டேன். உலகக் கோப்பைக்குப் பின் இதுதான் என் திட்டம்’’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீடியா மானேஜர் பிலிப் ஸ்பூனர் கூறும்போது, ’’இந்தியாவுக்கு எதிரான தொடர், கிறிஸ் கெய்லின் கடைசி தொடராக இருக்கும்’ என்றார்.
இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி 20, மூன்று ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
103 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 15 சதங்களுடன் 7214 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு முறை முச்சதங்கள் அடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட்டில் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.