இந்திய அணி, நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து பார்டர்-கவாஸ்கர் டிராபியான ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
இதனால், அந்த டெஸ்ட் தொடரை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோல்விகண்டுள்ள இந்தியா, இதில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் உள்ளது. இதன் காரணமாகவே கவுதம் காம்பீர் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில்தான், தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு, முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணன் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார். அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளர்களாக இருக்கும் சாய்ராஜ் பஹுதுலே, ஹ்ரிஷ்கேஷ் கனிட்கர், சுபதீப் கோஷ் ஆகியோர் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியடன் பயணிக்க உள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விஜய்குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், யாஷ் தயாள் இடம்பெற்றுள்ளனர். கர்நாடக வேகப்பந்து வீச்சாளரான விஜய்குமார் வைஷாக், ஐபிஎல் 2023இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அறிமுகமான பிறகு கடந்த இரண்டு சீசன்களில் சிறப்பாக செயல்பட்டவர் ஆவார்.
மேலும், அக்சர் படேல் , வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன், ஜிதேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய விக்கெட் கீப்பர்களுடன் பயணிக்க இருக்கிறது. இந்தத் தொடரில், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்புள்ளது. திலக் வர்மா, ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல பேட்டர்களாக இருப்பர் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போட்டி நடைபெற உள்ளது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய். , அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.