வெற்றிகளை குவித்த வகையில் தோனி சிறந்த கேப்டன்தான், ஆனால் என்னைப் பொறுத்தவரை அனில் கும்ப்ளேவைதான் சிறந்த கேப்டன் என கூறுவேன் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்தார் கவுதம் காம்பீர். பின்பு இவர் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே மற்றும் தோனி தலைமையிலான அணியிலும் அங்கம் வகித்தார். தோனி தலைமயிலான அணியில் இருந்தபோதுதான் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றி வரவாற்று சாதனைகளை படைத்தது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு தான் விளையாடிய காலத்தில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பேசிய கவுதம் காம்பீர் தனது கருத்தை முன் வைத்தார் அதில் "சந்தேகமே இல்லை. சாதனைகளின் அடிப்படையில் பார்த்தால் தோனி கேப்டன்கள் வரிசையில் முன்னே இருக்கிறார். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரை எனக்கு தெரிந்து அனில் கும்ப்ளேவே சிறந்த கேப்டனாக இருக்கிறார்".
இது குறித்து மேலும் தொடர்ந்த காம்பீர் " சவுரவ் கங்குலியும் கேப்டனாக சிறப்பாகவே பணியாற்றினார். ஆனால் ஒரே ஒருவர் இந்திய அணிக்காக நீண்டநாள் கேப்டனாக இருக்க வேண்டும் என விரும்பினேன் , அவர் அனில் கும்ப்ளேதான். அவரின் தலைமையில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். துரதிருஷ்டவசமாக அவரால் நீண்ட காலம் இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்க முடியவில்லை. அவர் ஒருவேளை நீண்டகாலம் கேப்டனாக இருந்திருந்தால் நிறைய சாதனைகளை முறியடித்திருப்பார்" என கூறியுள்ளார்.