உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா உலகக் கோப்பை ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற போட்டியில் 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதில் 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி, பின்பு பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றன.
காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் பிரேஸில் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. கடந்த 1986 ஆம் ஆண்டு மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-4 என பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. இப்போது இரண்டாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு பெல்ஜியம் முன்னேறியுள்ளது. இளம் வீரர்கள் அதிகம் கொண்டுள்ள அணியாக பிரான்ஸ் இருக்கிறது. அந்த அணியில் 19 வயதேயான மாப்பே, பவேர்ட், லுகாஸ் ஆகியோர் பிரான்ஸின் பிரதான அஸ்திரமாக பார்க்கப்படுகிறார்கள்.
அதேபோல ரெட் டெவில்ஸ் என அழைக்கப்படும் பெல்ஜியம் அணி மிகப் பெரிய ஸ்டார்களை கொண்ட அணி அல்ல. ஆனால் மிகவும் திறமை வாய்ந்த அணியாக அது பார்க்கப்படுகிறது. ராபர்ட்டோ மார்டினெஸ் தலைமையில் பெல்ஜிய அணி உலகக் கோப்பையை எவ்வாறு எதிர்கொள்ளும் என சந்தேகம் எழுந்த நிலையில் அந்த அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பெல்ஜிய கோல்கீப்பர் திபாட் கோர்டோய்ஸ் மிகத் திறமையாக செயல்படக் கூடியவர். இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால், இன்றையப் போட்டியிவ் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.