விளையாட்டு

பாண்டியா ஆல்ரவுண்டர் இல்லை அதுக்கும் மேல!: பொல்லாக் புகழாரம்..

பாண்டியா ஆல்ரவுண்டர் இல்லை அதுக்கும் மேல!: பொல்லாக் புகழாரம்..

webteam

ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என்ற வட்டத்திற்குள் சுருக்க முடியாது என முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார்.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட  தொடரை, 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இன்னும் ஒரு போட்டி விளையாடப்படவுள்ளது. இந்தியாவின் இந்த வெற்றி வரலாற்று வெற்றியாகும்.

இந்தப்போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில், டி வில்லியர்ஸ் மற்றும் டுமினி ஆகியோரின் விக்கெட்டுகளை பாண்டியா வீழ்த்தினார். இருவரும் முக்கிய பேட்ஸ்மேன்கள் என்பதால், பாண்டியாவின் பங்கு சிறந்தது என ரோகித் ஷர்மா பாராட்டியிருந்தார். 

இந்நிலையில் பாண்டியாவை பாரட்டியுள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஷான் பொல்லாக், “ஹர்திக் பாண்டியா சிறந்த கிரிக்கெட் வீரர். அவரை சாதாரண ஆல்ரவுண்டர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. ஆல்ரவுண்டர் என்றால் ஒரு போட்டியில் 2 அல்லது மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றுவார். அத்துடன் 10 பந்துகளில் 20 ரன்களை எடுப்பார். ஆனால் பாண்டியா அவ்வாறு இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் 20 ஓவர்கள் நிலைத்து விளையாடுகிறார். டெஸ்டில் 100 பந்துகளில் 60 ரன்களை எடுக்கிறார். டி20 போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியும், ரன்களை குவித்தும் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார். அவரது குணம் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. ஆட்டத்தின் போது அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குணம் விராட் கோலியை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் கண்டிப்பாக இந்திய அணியில் நீண்ட காலம் பங்காற்றுவார்” என்று கூறினார்.