விளையாட்டு

’கிங் விராத்’: வெளிநாட்டு வீரர்களின் புகழ் மழையில் கோலி!

webteam

இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் சதமடித்த விராத் கோலிக்கு பிரபல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோவ் 70 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந் தாலும், விராத் கோலி, அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 225 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இது அவருக்கு சாதனை சதம். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. இதையடுத்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவிக்காதவர் என்ற விமர்சனத்தை உடைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் அவரது ஆக்ரோஷ ஆட்டம் இங்கிலாந்து வீரர்களை கூட கைதட்ட வைத்தது. அவர் போராட்டக்குணத்துடன் ஆடிய விதம் கண்டும் அபார சதம் அடித்தது பற்றியும் பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறும்போது, ‘விராத் கோலி கிங்’ என்று தெரிவித்துள்ளார். மைக்கேல் வாகன் கூறும்போது, ’மறக்க முடியாத சதம். தனிஒருவனின் போராட்டம் இது’ என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, ‘கோலியின் ஆட்டத்தில் அதிகமாக அனல் தெறித்தது’ என்று தெரிவித்துள்ளார்.

இயான் பிஷப், ‘கோலியின் போராட்டத்தை ரசித்துப் பார்த்தேன். அவர் ஆடியவிதம் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அசார் மஹமூத், ‘கேப்டன் முன்னின்று அணியை வழி நடத்தியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது’ என்று பாராட்டியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், ‘முக்கியமான சதம் இது. டெஸ்ட் சதத்துக்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். இதே போல விவிஎஸ் லஷ்மண், ஹர்பஜன் சிங் உட்பட பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.