விளையாட்டு

உடல் எடை கூடி காணப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்-பாக். முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்

உடல் எடை கூடி காணப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்-பாக். முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்

சங்கீதா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தநிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொஹாலியில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியநிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 71 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதனால் 19.2 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவுசெய்தது. ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி இந்தப் போட்டியிலும் தோல்வியடைந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. இந்நிலையில், இந்திய வீரர்கள் பலர் உடல் எடை கூடி, உடற்தகுதி இல்லாமல் இருப்பதாலேயே இந்திய அணி தோல்வியடைந்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்கள் என்றால் அது இந்திய வீரர்கள் தான். அதிகபட்ச போட்டிகளில் அவர்கள் விளையாடுகிறார்கள். ஏன் அவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்று சொல்லுங்கள்?. இந்திய வீரர்களின் உடல் அமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. சில ஆசிய அணிகள் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன என்று கூட கூறுவேன். சில இந்திய வீரர்கள் அதிக எடையுடன் உள்ளனர். புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்கள் என்பதால் இந்திய வீரர்கள் உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இதைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்களா, இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் எனது பார்வையில் இந்திய அணியின் ஃபிட்னஸ் சிறந்ததாக இல்லை. சில அனுபவமிக்க வீரர்கள் பீல்டிங்கில் இருக்க வேண்டிய லெவலில் இல்லை. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிகவும் சிறந்த உடற்தகுதியுடன் இருக்கிறார்கள். அதிலும் விராட் கோலி உடற்தகுதிக்கு மிகச் சிறந்த உதாரணம். ஆனால் ரோகித் ஷர்மா, ரிஷப் பந்த், கே.எல். ராகுல் உடல் எடை கூடி இருக்கிறார்கள். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் கே.எல். ராகுல் சோம்பேறித்தனமாக இருந்தார். இவர்கள் ஃபிட்டாக மாறினால், மிகச் சிறந்த வீரர்களாக உருவெடுப்பார்கள்.

சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற நல்ல பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். உமேஷும் சிறப்பாக பந்து வீசினார். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் நம்பிக் கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்கள் நம்பகமானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில், ஹர்ஷல் 40 ரன்களை அள்ளிக் கொடுத்தார். ஒரு வேகப்பந்து வீச்சாளரின், பலம் மெதுவாக உள்ளது. இது எனக்கு ஏன் என்று புரியவில்லை" இவ்வாறு அவர் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டம், செப்டம்பர் 23-ம் தேதி நாக்பூரில் நடைபெறுகிறது.