இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்தவர். டெஸ்ட், ஒருநாள் என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் படைத்துள்ள சாதனைகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 34347 ரன்களை விலாசியுள்ளார் சச்சின். அதில் 100 சதங்களும் அடங்கும்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளே சச்சின் கிரீஸில் நிற்கின்ற சமயங்களில் கொஞ்சம் ஆட்டம் காணுவது உண்டு. அதற்கு காரணம் அவரது பேட்டிங்.
கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2003 - 04 சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது பிரிஸ்பேன், அடிலெய்ட் மற்றும் மெல்பேர்ன் டெஸ்டில் சொதப்பிய சச்சின் டெண்டுல்கர் சிட்னி மைதானத்தில் 241 ரன்களை விளாசியிருப்பார்.
இந்நிலையில் அதற்கான காரணம் ஒரு பாடல் தான் என சச்சின் தெரிவித்துள்ளார்.
“மூன்று டெஸ்ட் போட்டிகளில் சரிவர விளையாடாத எனக்கு நம்பிக்கை கொடுத்ததே அந்த பாடல் தான். அந்த போட்டியின் ஐந்து நாட்களும் அதை மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். மைதானத்தில், டிரஸ்ஸிங் ரூமில், ஹோட்டலில், பயணத்தின் போது என அனைத்து நேரத்திலும் அதை செய்தேன். பிரையன் ஆடம்ஸின் ‘சம்மர் ஆப் 69’ தான் அந்த பாடல். அதன் மூலம் அந்த போட்டியில் 241 ரன்களை சேர்த்திருந்தேன்” என தெரிவித்துள்ளார்.
இதே போல 2003 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது லக்கி அலியின் Sur ஆல்பத்தை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார் சச்சின். அந்த தொடரில் சச்சின் 673 ரன்களை எடுத்திருந்தார். இந்தியா பைனல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.