விளையாட்டு

தோனியின் தளபதி சுரேஷ் ரெய்னாவுக்கு பிறந்தநாள்

தோனியின் தளபதி சுரேஷ் ரெய்னாவுக்கு பிறந்தநாள்

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ‘தல’ தோனியின் அன்பு தளபதி சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று பிறந்தநாள். இருவரும் இணைந்து ஐபிஎல் போட்டிகளில் பல சம்பவங்களை செய்துள்ளனர். அதே போல இந்திய கிரிக்கெட் அணியில் தோனி ஆக்டிவ் கேப்டனாக இருந்த போது ரெய்னா தான் அவரது தளபதி. சர்வதேச அளவிலும் இருவரும் கூட்டு சேர்ந்து பந்துகளை துவம்சம் செய்துள்ளனர். இன்று சுரேஷ் ரெய்னாவுக்கு பிறந்தநாள். 

இதே நாளில் 1986 இல் உத்திர பிரதேசத்தின் முராத் நகர் பகுதியில் பிறந்தவர் ரெய்னா. இளையோர் கிரிக்கெட்டில் அசத்தி அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர் ரெய்னா. 

19 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் டிராவிட் தலைமையில் என்ட்ரி கொடுத்தவர். இலங்கை உடனான முதல் போட்டியில் டக் அவுட். சுழல் ஜாம்பவான் முரளிதரனிடம் தான் முதலில்  வீழ்ந்தார். 15வது போட்டியில் 81 ரன்களை விளாசி இந்தியாவுக்கு வெற்றி தேடி கொடுத்தார். அதன் பிறகு மேட்ச் வின்னராக பல போட்டிகளில் ஜொலித்தார். 2006 இல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடி இருந்தாலும் இந்திய டி20 அணியில் தனக்கென இடம் பிடிக்க மூன்று ஆண்டுகள் உழைத்தார். 

2008 துவங்கி 2014 வரை ஆண்டுக்கு 500 ரன்களுக்கு மேல் ஒருநாள் போட்டிகளில் ரன் மழை பொழிந்துள்ளார். தோனியின் பல வெற்றிகளுக்கு அணில் போல உதவி உள்ளார். பேட்டிங் மட்டுமல்லாது ஃபீல்டிங்கிலும் மாஸ் காட்டுவார் ரெய்னா. கேப்டனின் செல்லப்பிள்ளையாக சமயங்களில் பந்து வீசி விக்கெட்டுகளையும் வீழ்த்துவார். 

ரெய்னாவை இந்திய தேர்வாணையம் ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட்டாக பார்த்தது. அதன் வெளிப்பாடு தான் இந்தியாவுக்காக 228 ஒருநாள் போட்டிகளில் ரெய்னா விளையாட காரணம். மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களை குவித்துள்ளார். அதில் 5 சதங்களும், 36 அரை சதங்களும் அடங்கும். 

ஐபிஎல் தொடரிலும் லீடிங் ரன் ஸ்கோரராக ஜொலித்தவர் ரெய்னா. தோனியின் ஓய்வு  முடிவை தொடர்ந்து தானும் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இன்று தனது 34 வது பிறந்தநாளை மாலத்தீவில் குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். 

ஹேப்பி பர்த் டே ரெய்னா…