இந்திய கிரிக்கெட் அணியில், நான்காவது இடத்துக்கு ரிஷாப், விஜய் சங்கர் வேண்டாம் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் பயிற்சியாளருமான அனுஷ்மான் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தீராத பிரச்னையாக இருக்கிறது, 4வது இடம். இந்த இடத்துக்கு இன்னும் நிரந்தரமாக யாரும் செட் ஆகவில்லை. உலகக் கோப்பை தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையிலும் இந்திய அணி பேட்டிங் ஆர்டரில் திருப்தியின்மை வெளிப்பட்டு வருகிறது. ஷிகர் தவான் காயமடைந்த பின், நான்காவது வரிசையில் இறங்கிய கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆடி வருகிறார். 4 வது வரிசையில் இறங்கிய விஜய் சங்கர் உட்பட யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அந்த இடத்துக்கு பலரை பரீட்சித்துப் பார்த்தும் ஒரு சில போட்டிகளில் நன்றாக ஆடுகிறார்களே தவிர, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை. இதனால் அந்த இடம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர், அனுஷ்மான் கெய்க்வாட், நான்காவது இடத்துக்கு கேதர் ஜாதவ் சரியான வீரர் என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ’’கேதர் ஜாதவ், புத்திசாலித்தனமான வீரர். ரன்களை விரைவாகச் சேகரிப்பதில் சிறந்தவர். நான்காவது வரிசைக்கு அவர் பொருத்தமாக இருப்பார்’’ என்றார். அதோடு தினேஷ் கார்த்திக்கையும் அந்த இடத்துக்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
‘’தினேஷ் கார்த்திக், அனுபவ வீரர். சிறப்பாக ஆட்டத்தை முடிப்பவர் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். இந்திய அணி நெருக்கடியில் இருந்தால், நேரம் எடுத்துக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர். விராத் கோலி ஆடிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு துணையாக நின்று ஆடுவது முக்கியம். நான்காவது இடத்துக்கு ரிஷாப் பன்ட் பொருத்தமானவர் என்று நினைக்கவில்லை. அவர் நன்றாக விளையாடக் கூடியவர் என்றாலும் அவசரப்படாமல் நின்று ஆடுவது முக்கியம்’’ என்றார்.
’’ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுலும் விஜய் சங்கரும் ஸ்வீப் ஷாட் ஆடி ஆட்டமிழந்தனர். அந்த நேரத் தில் ஸ்வீட் ஷாட் ஆட வேண்டிய அவசியம் என்ன? அதனால்தான் அதற்கான விலையை கொடுத்தனர்’’ என்றார்.