விளையாட்டு

‘எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இவரை தேர்ந்தெடுக்கலாம்’-இங்கிலாந்து முன்னாள் வீரர்

‘எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இவரை தேர்ந்தெடுக்கலாம்’-இங்கிலாந்து முன்னாள் வீரர்

சங்கீதா

எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை தேர்ந்தெடுக்கலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி துவங்கிய 15-வது சீசன் ஐபிஎல் போட்டி பரபரப்பாக நடைபெற்றுவந்தநிலையில் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நேற்றிரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் ஓப்பனர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களே சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சாஹா 5 ரன்களில் விக்கெட்டை இழக்க மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகமல் இருந்தார்.

அதன்பிறகு வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34 ரன்களில் ரன் அவுட்டாக, டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்த அணி 18.1 ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி இலக்கை சுலபமாக அடைந்து அறிமுகப் போட்டியிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், பேட்டிங்கில் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததால், ஆட்ட நாயகன் விருது குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டது.

இந்த சீசன் முழுவதுமே ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துவதில் திறம்பட செயல்பட்டு வந்தார். குறிப்பாக சூப்பர் லீக் போட்டியில் 14 ஆட்டங்களில் 10 வெற்றி, 4 தோல்வி எனப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது குஜராத் டைட்டன்ஸ். இந்நிலையில், இந்திய அணியில் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்கு கேப்டனாக ஒருவர் தேவைப்பட்டால், ஹர்திக் பாண்ட்யாவைத் தான் நான் பரிந்துரைப்பேன் என்று ட்விட்டரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

அதில், “அறிமுக அணி மிக அருமையான சாதனை செய்துள்ளது. இன்னும் ஓரிரு வருடங்களில் இந்தியாவுக்கு ஒரு கேப்டன் தேவைப்பட்டால், நான் ஹர்திக் பாண்ட்யாவைத் தாண்டி வேறுயாரையும் பரிந்துரைக்க மாட்டேன்... மிகவும் அருமை குஜராத்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவிக்கையில், “எந்த அணியும் அதன் முதல் சீசனிலேயே கோப்பை வெல்வது எளிதானது அல்ல என்றாலும், ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில், உண்மையில் அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

கோப்பையை வென்றது ஒரு சிறந்த விஷயம். கோப்பையை வெல்வதை விட, நாங்கள் விளையாடிய விதம் மற்றும் தகுதி பெற்ற விதம்தான் மிக முக்கியமானது. பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்ட்யா 487 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.