England  web
கால்பந்து

இளம் நடுகளம், சுமாரான டிஃபன்ஸ், ஐஸ்லாந்து தோல்வி.. யூரோ கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து?!

கால்பந்து ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் யூரோ 2024 கால்பந்து தொடரானது வரும் 14ம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.

Viyan

ஒரு பெரிய கால்பந்து தொடர் வந்துவிட்டாலே இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்கள் போல் உயிர்த்தெழுந்துவிடுவார்கள். "It's coming home" என்று ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் அலற விடுவார்கள்.

1966-ம் ஆண்டில் சொந்த மண்ணில் உலகக் கோப்பை வென்ற பிறகு அந்த அணியால் ஒரு பெரிய தொடரையும் வெல்ல முடியவில்லை. அதனால் ஒவ்வொருமுறை உலகக் கோப்பை, யூரோ போன்ற தொடர்கள் நடக்கும் போதெல்லாம் இம்முறை கோப்பை எங்களுக்குத்தான் என்று அரைகூவல் விடுவார்கள். ஆனால் அது மட்டும் நடக்கவேயில்லை. இப்போது இன்னும் சில நாள்களில் யூரோ 2024 தொடர் நடக்கப்போகிறது. இந்த முறையாவது இங்கிலாந்து அணி கோப்பை வெல்லுமா? அதற்கு ஏற்ற சரியான ஸ்குவாடைத் தான் அந்த அணி கொண்டிருக்கிறதா?

யூரோ 2024

யூரோ தொடர் ஜெர்மனியில் ஜூன் 14ம் தேதி தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி சி பிரிவில் டென்மார்க், செர்பியா, ஸ்லொவேனியா ஆகிய அணிகளோடு இடம்பெற்றிருக்கிறது. இதுவே அந்த அணிக்குக் கொஞ்சம் சிக்கலாக அமையலாம்.

டென்மார்க் - FIFA தரவரிசையில் டென்மார்க் அணி 21வது இடத்தில் இருக்கிறது. எந்த அணிக்குமே சவால் கொடுக்கக்கூடிய வீரர்கள் அந்த அணியில் நிறைந்திருக்கிறார்கள்.

செர்பியா - 33வது இடத்தில் இருக்கிறது. அலெக்சாண்டர் மிட்ரோவிச், டுசான் வ்லாஹோவிச், டுசான் டேடிச் உள்பட நட்சத்திர ஃபார்வேர்ட்கள் நிறைந்த அணி. நிச்சயம் அவர்களாலும் சில அதிர்ச்சிகள் கொடுக்க முடியும்.

Euro 2024

ஸ்லோவேனியா - அந்த அணி மட்டும் தான் ஓரளவு எளிதான அணி. தரவரிசையில் 57வது இடத்தில் இருக்கிறது. ஆனால், அவர்களும் சமீபமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். கடைசியாக அந்த அணி ஆடிய 12 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக அந்த அணி கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகலையே வீழ்த்தியிருக்கிறது. அதனால் இங்கிலந்துக்கு நிச்சயம் இந்தப் பிரிவு எளிதாக இருக்கப்போவதில்லை.

இங்கிலாந்து ஸ்குவாட் எப்படி இருக்கிறது?

கேரத் சவுத்கேட் பயிற்சியாளர் ஆன பிறகு இங்கிலாந்து அணி ஒவ்வொரு தொடரிலும் பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கிறது. ஆனால் அவர்களால் கோப்பை வெல்லத்தான் முடியவில்லை. இந்த முறையும் இங்கிலாந்து அணி கோப்பை வெல்வதற்கு ஏற்ற அணியாகவே கருதப்படுகிறது.

தரமான வீரர்கள் பலர் இருந்த நிலையில், ஒருசில கடினமான முடிவுகளை எடுத்த சவுத்கேட் 26 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியை அறிவித்திருக்கிறார். ஜேம்ஸ் மேடிசன், ஜேக் கிரீலிஷ், ரஹீம் ஸ்டெர்லிங், மார்கஸ் ரேஷ்ஃபோர்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக ஹேரி மகுயரும் கூட இந்த அணியில் இடம்பெறவில்லை.

england squad

கோல்கீப்பர்கள்: ஜோர்டான் பிக்ஃபோர்ட், டீன் ஹெண்டர்சன், ஆரோன் ராம்ஸ்டேல்

டிஃபண்டர்கள்: லூயிஸ் டங்க், ஜோ கோமஸ், மார்க் குஹி, எஸ்ரி கோன்ஸா, லூக் ஷா, ஜான் ஸ்டோன்ஸ், கீரன் டிரிப்பியர், கைல் வாக்கர்.

மிட்ஃபீல்டர்கள்: டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட், ஜூட் பெல்லிங்கம், கானர் கேலகர், கோபி மைனூ, டெக்லன் ரைஸ், ஆடம் வார்டன்.

ஃபார்வேர்டுகள்: ஜெராட் போவன், எபரஸி எஸி, ஃபில் ஃபோடன், ஆன்டனி கார்டன், ஹேரி கேன், கோல் பால்மர், புகாயா சகோ, ஐவன் டோனி, ஆலி வாட்கின்ஸ்.

இந்த அணியில் அட்டாக் சிறப்பாக இருக்கிறது. டோனி தவிர்த்து அத்தனை வீரர்களுமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அனைத்து வகையான அட்டாகிங் பொசிஷன்களிலும் பொறுந்திப் போகக் கூடிய வீரர்கள் சவுத்கேட் வசம் இருக்கிறார்கள்.

england squad

நடுகளத்திலும் தரமான வீரர்கள் இருந்தாலும் அனைவருமே இளம் வீரர்கள். அலெக்சாண்டர் ஆர்னால்ட் நடுகளத்தில் ஆடுவது அவர்களுக்கு கன்ட்ரோல் கொடுக்கும். இருந்தாலும் பந்து அவர்கள் வசம் இல்லாதபோது ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைக்க டெக்லன் ரைஸையே அவர்கள் பெரிதும் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. இந்த சீசன் அவர் அட்டகாசமாக ஆடியிருக்கிறார். இருந்தாலும் அவர்மீது அதிக நெருக்கடி ஏற்படும். கோபி மைனூ, ஆடம் வார்டன் போன்ற இளம் வீரர்கள் பிரீமியர் லீகில் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், அதற்குள் அவர்களை இவ்வளவு பெரிய அரங்கில் இறக்கியிருப்பது என்ன மாதிரியான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

england

அதைவிடப் பெரிய பிரச்சனை டிஃபன்ஸில் தான். சென்ட்டர் பேக்கில் ஸ்டோன்ஸ் தான் அதிக நம்பிக்கை கொடுப்பவர். ஆனால், அவரும் ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்து வெளியேறினார். மகுயர் ஏற்கெனவே காயத்தால் ஸ்குவாடில் இடம்பெறவில்லை. நல்ல ஃபார்மில் இருக்கும் பிரான்த்வெயிட் தேர்வு செய்யப்படாமல், லூயிஸ் டங்க் இடம்பெற்றிருப்பதும் இப்போது விமர்சனத்துக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. போக, இடது ஃபுல்பேக் பொசிஷனில் இயற்கையாக ஆடும் வீரர்கள் லூக் ஷா மட்டுமே ஸ்குவாடில் இருக்கிறார். அவரும் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. அதனால் டிரிப்பியர் அங்கு விளையாட வாய்ப்பு அதிகம். அப்படி ஆடினால் இடது விங் சற்று பலவீனமடையும். இது அட்டாக்கில் எந்த வீரர் ஆடுகிறார் என்பதிலும் தாக்கம் ஏற்படுத்தும். சவுத்கேட் தொடர்ந்து இளம் லெஃப்ட் பேக் வீரர்களைப் புறக்கணிப்பதையும் பலரும் விமர்சிக்கிறார்கள்.

தலைவலி கொடுக்கும் ஐஸ்லாந்து தோல்வி

iceland defeat england

இந்த ஸ்குவாட் பஞ்சாயத்துக்கெல்லாம் மத்தியில் இந்த வாரம் நடந்த நட்புறவு போட்டியில் தரவரிசையில் 72வது இடத்தில் இருக்கும் ஐஸ்லாந்துக்கு எதிராகத் தோற்றிருக்கிறது அந்த அணி! இது இப்போது அணி மீது பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்தத் தோல்வி ஒரு வகையில் நல்லது தான் என்றும் தங்கள் அணி விழித்துக்கொள்ளும் என்றும் சவுத்கேட் கூறியிருக்கிறார். இருந்தாலும் இளமையான அந்த நடுகளமும், சுமாரான அந்த டிஃபன்ஸும் எந்த அளவுக்கு இந்தத் தொடரில் எழுச்சி பெறப்போகிறது என்பது தான் அவர்களின் வாய்ப்பை முடிவு செய்யும்.