Championship Football League Twitter
கால்பந்து

தொடங்கியது சாம்பியன்ஷிப் சீசன்... வெற்றியோடு தொடங்கிய லெஸ்டர் சிட்டி, சௌதாம்ப்டன் அணிகள்!

இங்கிலாந்து கால்பந்து தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஷிப் லீக் தொடர் தற்போது தொடங்கியுள்ளது.

Viyan

இங்கிலாந்து கால்பந்து பிரமிட்டின் இரண்டாவது டிவிஷன் லீகான சாம்பியன்ஷிப் இந்த வாரம் தொடங்கியது. சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட மிடில்ஸ்ப்ரோ தோல்வியோடு சீசனைத் தொடங்கியிருக்க, பிரீமியர் லீகில் இருந்து ரிலகேட் ஆன லெஸ்டர் சிட்டி, சௌதாம்ப்டன் அணிகள் வெற்றியோடு தங்கள் சாம்பியன்ஷிப் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றன.

சாம்பியன்ஷிப் தொடர் - பிரீமியர் லீக்

இங்கிலாந்து கால்பந்தின் இரண்டாவது டிவிஷன் தொடர் சாம்பியன்ஷிப். மொத்தம் 24 அணிகள் இந்த லீகில் பங்கேற்கும். 46 சுற்றுகள் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி நேரடியாக முதல் டிவிஷனான பிரீமியர் லீகுக்கு தகுதி பெறும். 3 முதல் 6 இடங்கள் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் விளையாடி அதை வெல்லும் அணி மூன்றாவது அணியாக புரமோட் ஆகும். அதேபோல், சாம்பியன்ஷிப் சீசனில் கடைசி 3 இடங்கள் பிடிக்கும் அணிகள் மூன்றாவது டிவிஷனான லீக் 1 தொடருக்கு ரிலகேட் ஆகும். பிரீமியர் லீகில் இருந்து ரிலகேட் ஆகும் 3 அணிகளும், லீக் 1 தொடரிலிருந்து புரமோட் ஆகும் 3 அணிகளும் அடுத்த சாம்பியன்ஷிப் சீசனில் இடம்பெறும்.

கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சௌதாம்ப்டன்!

2022-23 சாம்பியன்ஷிப் சீசன் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கியது. பிரீமியர் லீக் தொடரிலிருந்து ரிலகேட் ஆகியிருந்த சௌதாம்ப்டன் முதல் போட்டியிலேயே மோதியது. ஷெஃபீல்ட் வெட்னஸ்டே அணியுடன் மோதிய சௌதாம்ப்டன் 2-1 என வெற்றி பெற்று சீசனைத் தொடங்கியது. சே ஆடம்ஸ், ஆடம் ஆர்ம்ஸ்ட்ராங் இருவரும் சௌதாம்ப்டன் அணிக்காக கோலடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாம்பியன்ஷிப் தொடருக்குள் நுழைந்திருக்கும் சௌதாம்ப்டன் இந்தப் போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக பாஸிங்கில் அந்த அணியின் வீரர்கள் கலக்கினார்கள். ஒட்டுமொத்தமாக 90 நிமிடங்களில் 987 பாஸ்களை முடித்தது சௌதாம்ப்டன்.

southampton vs sheffield wednesday

ரிலகேட் ஆன மற்றொரு அணியான லெஸ்டர் சிட்டி அதே ஸ்கோர் லைனில் வெற்றி பெற்றது. ஆனால் அவர்களின் ஆட்டம் அவ்வளவு எளிதாக இல்லை. கவன்ட்ரிக்கு எதிரான இந்தப் போட்டியில் 47வது நிமிடத்தில் கோல் வாங்கியது அந்த அணி. ஆனால், கடைசி கட்டத்தில் இளம் மிட்ஃபீல்டர் கீர்னான் டியூஸ்பெரி ஹால் இரண்டு கோல்கள் அடித்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார். ஜேம்ஸ் மேடிசன், ஹார்வி பார்ன்ஸ், யூரி டீலமான்ஸ் போன்ற வீரர்களை இழந்திருந்தாலும், சாம்பியன்ஷிப் அரங்கிற்கு தேவையானதை விட அதிக திறமை லெஸ்டர் அணியிடம் இருக்கிறது. இன்னும் பெரும்பாலான வீரர்கள் அந்த அணியில் தொடர விரும்புவதால், முன்னாள் பிரீமியர் லீக் சாம்பியன் இம்முறை நேரடியாக புரமோஷன் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீட்ஸ் யுனைடட் - பிளைமௌத் ஆர்கைல் - மிடில்ஸ்ப்ரோ

பிரீமியர் லீகில் இருந்து ரிலகேட் ஆன இரண்டு அணிகள் வெற்றியோடு சீசனைத் தொடங்கிய நிலையில், மற்றொரு அணியான லீட்ஸ் யுனைடட் போராடி தோல்வியைத் தவிர்த்தது. கார்டிஃப் சிட்டிக்கு எதிராக விளையாடிய அந்த அணி முதல் பாதியிலேயே இரண்டு கோல்கள் வாங்கியது. இருந்தாலும் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு 2 கோல்கள் அடித்தது அந்த அணி. அட்டாக்கில் தரமான வீரர்கள் இருந்தாலும், அந்த அணியின் டிஃபன்ஸ் சற்று பலவீனமாக இருக்கிறது. அது இந்தப் போட்டியில் தெளிவாகத் தெரிந்தது.

leeds united vs cardiff city

ரிலகேட் ஆன அணிகள் போல, புரமோட் ஆன அணிகளுமே சிறப்பாக செயல்பட்டன. பிளைமௌத் ஆர்கைல் அணி 3-1 என ஹட்டர்ஸ்ஃபீல்ட் கிளப்பை வீழ்த்தியது. இந்த சீசனுக்கு முன்பு பிளைமௌத் அணி மீண்டும் லீக் 1 தொடருக்கே திரும்பிவிடும் என்றே பெரும்பாலானவர்கள் கணித்திருந்தனர். ஆனால், அந்த அணி முதல் போட்டியிலேயே அனைவருக்கும் ஆச்சர்ர்யமளித்திருக்கிறது. அதேபோல் இப்ஸ்விச் டவுன் அணியும் 2-1 என சண்டர்லேண்ட் அணியை வீழ்த்தியது. மற்றொரு அணி ஷெஃபீல்ட் வெட்னஸ்டே, சௌதாம்ப்டனிடம் தோல்வியடைந்தது.

millwall vs middlesbrough

இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட மிடில்ஸ்ப்ரோ அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மில்வால் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தாலும், இலக்கை நோக்கி அவர்களால் அதிக ஷாட்கள் அடிக்க முடியவில்லை. அதனால் 1-0 என அந்த அணி தோல்வியடைந்தது.

சாம்பியன்ஷிப் முடிவுகள்: கேம் வீக் 1

ஷெஃபீல்ட் வெட்னஸ்டே 1 - 2 சௌதாம்ப்டன்

நார்விச் சிட்டி 2 - 1 ஹல் சிட்டி

பிளைமௌத் ஆர்கைல் 3 - 1 ஹட்டர்ஸ்ஃபீல்ட்

பிரிஸ்டல் சிட்டி 1 - 1 பிரெஸ்டன்

மிடில்ஸ்ப்ரோ 0 - 1 மில்வால்

ஸ்டோக் சிட்டி 4 - 1 ரோதர்ஹாம்

Championship Football League

ஸ்வான்சி 1 - 1 பிர்மிங்ஹம்

பிளாக்பர்ன் ரோவர்ஸ் 2 - 1 வெஸ்ட் புரோம்விச் ஆல்பியான்

வாட்ஃபோர்ட் 4 - 0 குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ்

லெஸ்டர் சிட்டி 2 - 1 கவன்ட்ரி

லீட்ஸ் யுனைடட் 2 - 2 கார்டிஃப் சிட்டி

சண்டர்லேண்ட் 1 - 2 இப்ஸ்விச் டவுன்