Kylian Mbappe Twitter
கால்பந்து

முற்றும் எம்பாப்வே - பி.எஸ்.ஜி அணியுடனான ஒப்பந்த மோதல்! உள்ளே நுழையுமா ரியல் மாட்ரிட் அணி?

தற்போது பிஎஸ்ஜி அணிக்காக கிளப் போட்டிகளில் விளையாடி வரும் எம்பாப்வே, அந்த அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான மோதலில் சிக்கலை சந்தித்துவருகிறார்.

Viyan

பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்புக்கும், அந்த அணியின் சூப்பர் ஸ்டார் கிலியன் எம்பாப்வேவுக்குமான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்த ஆண்டுக்கு மேல் ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று எம்பாப்வே சொல்லியிருந்த நிலையில், ஒப்பந்தம் கையெழுத்திடாவிட்டால் இந்த சீசனே வெளியேறட்டும் என்று அந்த கிளப்பின் தலைவர் நாசர் அல்-கலீஃபி கூறியிருக்கிறார்.

Kylian Mbappe

கிலியன் எம்பாப்வே - கால்பந்து உலகின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக குறுகிய காலத்திலேயே தன் அதீத திறமையால் மாறிவிட்டார். 24 வயதிலேயே கால்பந்து உலகின் சிகரத்தை எட்டி அடுத்த லெஜண்ட் வீரர் வரிசையில் இருக்கிறார். 2018 உலகக் கோப்பையை வென்ற அவர், சிறந்த இளம் வீரருக்கான விருதை வாங்கி அசத்தினார். 2022 உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதையும் வென்றார். கிளப் கால்பந்திலும் தன் ஆரம்ப கட்டத்திலேயே கலக்கிய அவரை, 2017ம் ஆண்டு அணிக்குள் கொண்டுவந்த பிஎஸ்ஜி, அடுத்த ஆண்டு வரையில் விளையாடுவதற்காக 180 மில்லியன் யூரோ கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. அப்போதிலிருந்து பிஎஸ்ஜி அணியின் தூணாக விளங்கிவருகிறார் எம்பாப்வே.

எம்பாப்வேவிற்கும் பிஎஸ்ஜி அணிக்கும் இடையிலான ஒப்பந்த மோதல்?

நீண்ட காலமாகவே எம்பாப்வேவை ரியல் மாட்ரிட் அணி வாங்க நினைப்பதாக செய்திகள் வந்துகொண்டே இருந்தன. 2023 சீசனின் முடிவில் பிஎஸ்ஜியுடன் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக இருந்த நிலையில், அந்த சீசன் முடிந்ததும் அவர் மாட்ரிட் அணிக்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரியல் மாட்ரிட்டும் அவருக்காகக் காத்திருந்தது. ஆனால், அவரை எப்படியோ சம்மதிக்கவைத்து ஒப்பந்தத்தை 2 ஆண்டுகள் நீடித்தது பிஎஸ்ஜி. 2024 வரை ஒப்பந்தத்தை நீடித்தார் எம்பாப்பே. ஒருவழியாக எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒன்றில் பேசியிருந்த எம்பாப்வே, தான் இதற்கு மேல் பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று கூறினார். இது கால்பந்து உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

Kylian Mbappe

அதற்கு சில தினங்கள் முன்புதான் இளம் மிட்ஃபீல்டர் ஜூட் பெல்லிங்கமை சுமார் 100 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியிருந்தது ரியல் மாட்ரிட். இந்த சீசனில் இதற்கு மேல் வேறு வீரர்களை வாங்கப்போவதில்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர் கார்லோ ஆன்சலோட்டி கூறியிருந்தார். அதனால் இந்த ஆண்டு அவர் அங்கு போவாரா என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.

எந்த வீரரை விடவும் பிஎஸ்ஜி அணியே முக்கியமானது! - பிஎஸ்ஜி தலைவர் நாசர் அல்-கலாஃபி

இந்நிலையில், பிரான்ஸின் ஒரு பத்திரிகைக்கு பிஎஸ்ஜி தலைவர் நாசர் அல்-கலாஃபி பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், "எம்பாப்வே பிஎஸ்ஜி அணியோடு தொடரவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதேசமயம் அவர் ஃப்ரீ டிரான்ஸ்ஃபரில் சென்றுவிடவும் முடியாது. எங்களோடு ஒப்பந்தம் நீட்டிப்பது பற்றி வார்த்தையளவில் அவர் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார். அதை ஒரு பேட்டியிலும் கூறியிருக்கிறார். அதைப் பற்றி இங்கு விவாதிப்பதற்கே இடமில்லை. அடுத்த சீசன் அவர் வெளியேற விரும்புகிறார் என்று கேள்விப்பட்டபோது அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஏனெனில், கிலியன் ஒரு அற்புதமான வீரர். ஒரு ஜென்டில்மேன். அவர் ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் வெளியேறினால், அது பிரான்ஸின் மிகப் பெரிய கிளப்பை பலவீனமாக்கிவிடும். நான் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன்" என்று கூறினார்.

டிரான்ஸ்ஃபர் விண்டோ முழுவீச்சில் இருப்பதைப் பற்றிக் கேட்டதற்கு, "அதனால்தான் அவர் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவு செய்யவேண்டும் என்கிறோம். அதிகபட்சம் இரண்டு வாரங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவர் ஒருவேளை புதிய ஒப்பந்தம் கையெழுத்திடவேண்டாம் என்று நினைத்தால், கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர் வெளியேறலாம். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்தான். எந்த ஒரு வீரருமே, யாருமே... ஏன் நானே கூட இந்த கிளப்பை விட பெரிதல்ல. அதை நான் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்" என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் அவர்.

எம்பாப்வேவிற்கு இருக்கும் சிக்கல் என்ன? அவர் என்ன முடிவை எட்ட முடியும்?

இப்போது எல்லாமே எம்பாப்பேவின் கையில் இருப்பதாகத் தெரியலாம். ஆனால், அவர் வெளியேறுவதும் அவ்வளவு எளிதாக இருக்காது. ஒப்பந்தத்தில் ஒரு ஆண்டு மட்டுமே மீதமிருந்தாலும் நிச்சயம் எம்பாப்பேவுக்கு 100 மில்லியன் யூரோவாவது பிஎஸ்ஜி எதிர்பார்க்கும். இன்னும் ஒரு ஆண்டே இருப்பதால், ரியல் மாட்ரிட் பெரிய தொகை கொடுக்காமல், அடுத்த சீசனுக்கு முன்பாக எந்த செலவுமின்றி ஒப்பந்தம் செய்யவே நினைக்கும். இந்த ஆண்டு ஏற்கெனவே பெரிய முதலீடு செய்துவிட்டதால், இன்னும் பெரிய தொகையை செலவு செய்வார்களா தெரியவில்லை. ஆனால், கேப்டன் கரீம் பென்சிமா சவுதி அரேபியா பக்கம் சென்றுவிட்டதால் அவர்களுக்கு அந்த இடத்தை நிரப்பவேண்டிய கட்டாயம் இருக்கிறது. பார்சிலோனா எழுச்சி பெற்று கடந்த சீசன் லா லிகாவை வென்றிருக்கும் நிலையில், நல்ல ஸ்டிரைக்கர் நிச்சயம் அந்த அணிக்குத் தேவைப்படும். ஆனால், இந்த பெரும் தொகை மட்டும்தான் அவர்களுக்கு இடையூறாக இருக்கும்.

Kylian Mbappe

சரி மாட்ரிட் தவிற வேறு அணியால் அவரை வாங்க முடியுமா என்றால், அந்த வாய்ப்பு வெகுசில அணிகளுக்கு மட்டுமே இருக்கிறது. பெரும் பொருளாதார சிக்கலில் இருக்கும் பார்சிலோனாவுக்கு நிச்சயம் வாய்ப்பில்லை. பேயர்ன் மூனிச் அவரை வாங்குவதற்கும் பெரும் தொகை கொடுக்காது. அவருக்கான ஊதியமும் கொடுக்காது. பிரீமியர் லீக் அணிகளால் அவரை வாங்க முடியும் என்றாலும், அவர் எதிர்பார்க்கும் ஊதியம் கொடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான். அனைத்து பிரீமியர் லீக் அணிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே பல மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்திருப்பதால், financial fair play பிரச்னையும் வந்துவிடக்கூடும். எனவே இருக்கும் ஒரே நல்ல வாய்ப்பு ரியல் மாட்ரிட் தான்.

ஒருவேளை அவரை எந்த அணியும் வாங்காவிட்டால், அவரும் ஒப்பந்தத்தை நீட்டிக்காவிட்டால் அவரை விளையாடவே வைக்காமல் செய்ய பிஎஸ்ஜி அணியால் முடியும். வீரர்களை ஒப்பந்தம் கையெழுத்திடவைக்க பல அணிகள் இப்படிச் செய்திருக்கின்றன. எனவே எம்பாப்பே சரியான முடிவை மிக விரைவில் எடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்.