england vs serbia web
கால்பந்து

யூரோ 2024: வெற்றியோடு தொடங்கியிருக்கும் இங்கிலாந்து.. ஆனால் அப்பட்டமாய்த் தெரியும் பிரச்னைகள்!

Viyan

அனைத்தும் இருந்தும் கோப்பை இல்லை..

ஒவ்வொரு பெரிய தொடர் நடக்கும்போதும் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்கள் போல் மாறிவிடுவார்கள். 'இந்த முறை எங்களுக்குத்தான் கோப்பை' என்று ஆர்ப்பரிப்பார்கள். ஆனால் அது நடக்கவேயில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த இளம் தலைமுறை இங்கிலாந்து வீரர்களின் எழுச்சி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. கேரத் சவுத்கேட் பயிற்சியாளர் பதவியை ஏற்ற பிறகு, 2018 உலகக் கோப்பையில் அரையிறுதி, யூரோ 2020ல் இறுதி, 2022 உலகக் கோப்பையில் காலிறுதி என சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது அந்த அணி. ஆனால் அவர்களால் அந்தக் கோப்பையைத்தான் வெல்ல முடியவில்லை. அதனால் குறைந்தபட்சம் இந்த முறையாவது அந்த அணி கோப்பை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இங்கிலாந்து கால்பந்து அணி

டிஃபன்ஸில் ஒரு சில பிரச்சனைகள் இருந்தாலும், அட்டாக்கில் நல்ல தரமான வீரர்கள் இருந்ததும், நடுகள வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதும் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் கருதப்பட்டது. இந்நிலையில் செர்பியா அணிக்கு எதிராக இந்த யூரோவை தொடங்கியது இங்கிலாந்து.

முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து..

போட்டியை எதிர்பார்த்தது போலவே அட்டகாசமாக தொடங்கியது இங்கிலாந்து. ஆட்டத்தின் 13வது நிமிடத்திலேயே அந்த அணிக்கு முதல் கோல் வந்தது. வலது விங்கில் கைல் வால்கர் கொடுத்த த்ரூ பாலை அட்டகாசமாக பாக்சுக்குள் கடத்திச் சென்றார் புகாயா சகா. டச்லைன் வரை சென்று அவர் பெனால்டி ஏரியாவுக்கு கிராஸ் செய்தார். அது செர்பிய டிஃபண்டரின் காலில் பட்டு நன்கு பவுன்ஸ் ஆக, புயல் வேகத்தில் பாக்சுக்குள் நுழைந்த ஜூட் பெல்லிங்கம் அதே வேகத்தில் ஹெட் செய்து கோலாக்கினார். இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்க, அதே உத்வேகத்தை அடுத்த 80 நிமிடங்களும் இங்கிலாந்து வீரர்கள் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுதான் நடக்கவில்லை.

இங்கிலாந்து கால்பந்து அணி

முதல் பாதியில் டிஃபன்ஸில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டு இங்கிலாந்து அணியைத் தடுத்த செர்பியா, இரண்டாவது பாதியில் அட்டாக்கில் அசத்தியது. செர்பிய மேனேஜர் டிரகான் ஸ்டஜ்கோவிச் சிலபல மாற்றங்களை செய்ய, அது நல்ல பலன் கொடுத்தது. மிலிங்கோவிச்-சவிச், விலாஹோவிச், டேடிச், பிர்மான்செவிச் என எல்லோருமே இங்கிலாந்து அணிக்குத் தலைவலியாக இருந்தனர். இரண்டாவது பாதியில் கோலடிக்க பல முயற்சிகள் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்களால் அந்த கோலைத் தான் அடிக்க முடியவில்லை.

களத்தில் எங்கே இங்கிலாந்து சொதப்பியது?

இந்தப் போட்டியின் ஒருசில எண்கள் இங்கிலாந்து எந்த அளவுக்குப் பின்தங்கியது என்று கூறும்,

பால் பொசஷன்: செர்பியா - 47%, இங்கிலாந்து - 53%

ஷாட்கள்: செர்பியா - 6, இங்கிலாந்து - 5

பாஸ்கள்: செர்பியா - 504, இங்கிலாந்து - 588

கார்னர்கள்: செர்பியா - 2, இங்கிலாந்து - 1

செர்பியா அட்டாக்கில் தொடர்ந்து அசத்த, இங்கிலாந்து அணி டிஃபன்ஸிலேயே கவனம் செலுத்தவேண்டியிருந்தது. அட்டாக்கில் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

இங்கிலாந்து அணி செய்த தவறுகள்..

இந்தப் போட்டியில் ஒருசில இங்கிலாந்து வீரர்களின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது. கேப்டன் ஹேரி கேன் மொத்த போட்டியிலும் செர்பிய பாக்சுக்குள் ஒரு முறை மட்டுமே பந்தைத் தொட்டார். ஃபில் ஃபோடன் இடது விங்கில் மிகவும் மோசமாக ஆடினார். அவரால் எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. ஒரு கிராஸ், ஒரு த்ரூ பால்... எதுவும் இல்லை.

harry kane

அதேசமயம் நடுகளத்தில் போட்டியைத் தொடங்கிய டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட் சோபிக்கத் தவறினார். சில இடங்களில் பொசஷனை விட்ட அவர், சரியான இடத்தில் இருக்கவும் தவறினார். முதல் பாதியில் அசத்திய சகாவால் இரண்டாவது பாதியில் எதுவும் செய்ய முடியவில்லை.

Foden

இப்படி எல்லாமே நடக்கும்போது ஆட்டத்தின் போக்கை யாராலும் மாற்ற முடியவில்லை. மாற்றியிருக்கவேண்டிய பயிற்சியாளர் சவுத்கேட் வழக்கம்போல் சப்ஸ்ட்டியூஷன் செய்ய தாமதம் செய்தார். டிரென்ட், சாகா போன்றவர்களை மாற்றினாலும் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாத ஃபோடனை 90 நிமிடங்களும் ஆடவைத்தார். இந்த செயல்பாடுகளும் முடிவுகளும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இங்கிலாந்து அணி தங்கள் அடுத்த போட்டியில் வியாழக்கிழமை டென்மார்க் அணியுடன் மோதுகிறது.