லமின் யமால் pt web
கால்பந்து

Euro Cup|16 வயதில் கோல்; பீலேவின் சாதனை முறியடிப்பு! உலகை திரும்பி பார்க்கவைத்த ஸ்பெயின் வீரர் யமால்

Angeshwar G

யூரோ கால்பந்து கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் மோதியது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் 2:1 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றிருந்தபோது, 16 வயதேயான லமின் யமால் அசாத்தியமாக ஒரு கோல் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சிலர் இதுவே போட்டியின் சிறந்த கோல் என பெயரிட்டுள்ளனர்.

போட்டிக்குப் பின் பேசிய யமால், “வெற்றிக்காகவும் இறுதிப்போட்டிக்கு வந்ததற்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது போட்டியின் சிறந்த கோலா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், யூரோவில் தேசிய அணியுடன் இறுதிப் போட்டிக்கு வருவது சிறப்பு வாய்ந்தது. மூத்த தேசிய அணியுடன் இறுதிப் போட்டியை எட்ட வேண்டும் என்பது எனது கனவு. என் அம்மாகூட இது அவருடைய கனவென்று கூறினார். எனது முதல் கோல் அரையிறுதியில் பிரான்ஸ்க்கு எதிராக அமைந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்,.

முன்னதாக, இளம் வயதில் யூரோ கோப்பையில் விளையாடியவர் என்ற பெருமையை யமால் பெற்றிருந்தார். குரேஷியாவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் யமால் களமிறங்கியபோது அவருக்கு 16 வயது 338 நாட்கள் மட்டுமே. இந்நிலையில், கோல் அடித்த இளம் வீரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார்.

இதன் மூலம் உலகக்கோப்பை, யூரோ, கோப்பா அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய தொடர்களில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் யமால் படைத்துள்ளார். பிரேசில் ஜாம்பவான் பீலே,1958ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தனது 17ஆவது வயதில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.

குரூப் போட்டிகளில் லமின் யமால் சிறப்பாக விளையாடியபோதும், மிக விரைவாகவே சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டார். இதற்குள் ஒரு சுவாரஸ்யமான காரணமும் ஒளிந்திருக்கிறது. போட்டி நடைபெறும் ஜெர்மனியில் 18 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள் இரவு 11 மணிக்கு மேல் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்பது விதி.. இதனால் 11 மணிக்கு முன்பாக, யமாலுக்கு பதில் மாற்று வீரர் களமிறக்கப்பட்டார்.