Newcastle United SN
கால்பந்து

எழுச்சியைத் தொடருமா நியூகாசில் யுனைடட்! இந்த சீசனில் டாப் 4-க்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?

Viyan

2022-23 பிரீமியர் லீக் சீசனில் நான்காவது இடம் பிடித்து அசத்தியது நியூகாசில் யுனைடட் அணி. அதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கும் தகுதி பெற்றது. ஒரு டாப் 4 அணியைப் போல் தரமான ஃபுட்பாலை சீசன் முழுவதும் ஆடிய அந்த அணி, இந்த ஆண்டும் அதைத் தொடர நினைக்கும். ஆனால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அப்படியொரு செயல்பாட்டைக் கொடுக்க முடியுமா? அதற்கான சரியான பாதையில் அந்த அணி சென்றுகொண்டிருக்கிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

2021ம் ஆண்டு சவுதி அரேபியாவின் 'பப்ளிக் இன்வஸ்ட்மென்ட் ஃபண்ட்' நியூகாசில் யுனைடட் அணியின் 80 சதவிகித பங்குகளை வாங்கியது. பல சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் பிறகுதான் இந்த உரிமையாளர் மாற்றம் அரங்கேறியது. சவுதியின் செல்வாக்கின் மூலம் பல பெரிய வீரர்களை நியூகாசில் வளைத்துப்போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சீரான முன்னேற்றத்துக்கான திட்டத்தை வகுத்தி அந்தப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது அந்த அணி.

Newcastle United

உரிமையாளர் மாற்றம் நிகழ்ந்ததும் பல முன்னணி பயிற்சியாளர்களை அந்த அணி நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜிடேன் முதல் மொரினியோ வரை பல பெயர்கள் பேசப்பட்டன. ஆனால் முன்னாள் போர்ன்மவுத் அணியின் மேனேஜர் எட்டி ஹோவை நியமித்தது அந்த அணி. அதன்பிறகு ஒவ்வொரு பொசிஷனாக அவர்கள் மேம்படுத்தத் தொடங்கினார்கள். கீரன் டிரிப்பியர், ஸ்வென் போட்மேன், நிக் போப், புரூனோ கிமாரஷ், அலெக்சாண்டர் ஈசாக் என தரமான ஸ்டார் வீரர்களை ஒவ்வொரு டிரான்ஸ்ஃபர் விண்டோவிலும் அணியில் இணைத்தார்கள். அதன் விளைவு 2022-23 அந்த அணிக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்றது.

டாப் 4-ல் முடித்து பிரீமியர் லீக்கிற்கு தகுதி பெற்ற நியூகாசில் யுனைடட்!

சரியான வீரர்களை வாங்கியது மட்டுமல்லாமல், அணியை மிகச் சரியான முறையில் ஹோவ் கட்டமைத்ததும் அவர்களின் செயல்பாட்டை மேம்ப்படுத்தியது. ஃபார்வேர்டாக தடுமாறிய ஜோயலின்டன், மிட்ஃபீல்டில் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்தார். மிகேல் ஆல்மிரானின் நம்பிக்கையும் செயல்பாடும் விண்ணைத் தொட்டது. ஒரு அணியாக சிறப்பாக செயல்படத்தொடங்கியது நியூகாசில். சீசனின் மூன்றாவது போட்டியிலேயே மான்செஸ்டர் சிட்டி அணியை கிட்டத்தட்ட தோற்கடித்தது. ஆனால் ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது.

Newcastle United

கீரன் டிரிப்பியர் டிஃபன்ஸில் மட்டுமல்லாமல் அட்டாக்கிலும் கலக்கினார். கேலம் வில்சனிடம் இருந்து எப்போதும் போல் கோல்கள் வந்தன. அதனால் நல்ல முடிவுகள் தொடர்ந்து கிடைத்தன. ஜனவரி வரையிலும் முதல் 23 போட்டிகளில் அந்த அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோற்றிருந்தது. லிவர்பூல் மற்றும் செல்சீ போன்ற அணிகள் தடுமாறியதால் அந்த அணியின் நல்ல செயல்பாட்டின் பலன் அவர்களை டாப் 4 இடங்களுக்குள் வைத்திருந்தது. ஒட்டுமொத்த சீசனிலுமே ஐந்து போட்டிகளில் மட்டும்தான் தோல்வியைத் தழுவியது அந்த அணி. மான்செஸ்டர் சிட்டி (5 தோல்விகள்) மட்டுமே அவர்களுக்கு நிகராக குறைவான தோல்விகள் அடைந்திருந்தது.

Newcastle United

சீசன் முடிவில் 19 வெற்றிகள், 14 டிரா என மொத்தம் 71 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் முடித்தது அந்த அணி. அதனால் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கும் தகுதி பெற்றது. பிரீமியர் லீகில் மட்டுமல்லாமல் லீக் கப்பிலும் சிறப்பாக செயல்பட்டது அந்த அணி. இறுதிப் போட்டி வரை முன்னேறிய அந்த அணி, அப்போட்டியில் 2-0 என மான்செஸ்டர் யுனைடட் அணியிடம் தோற்றது.

இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டதை பெறுமா?

கடந்த சீசனின் செயல்பாட்டை இந்த சீசனிலும் தொடரவேண்டும் என்று நியூகாசில் நினைக்கும். ஆனால் அது எளிதாக இருக்கப்போவதில்லை. கடந்த ஆண்டு டாப் 4 இடத்தைத் தவறவிட்ட லிவர்பூல் நிச்சயம் இந்த ஆண்டு வீறுகொண்டு எழும். செல்சீ இப்போதுதான் புதிய அணியோடு செட்டில் ஆகிக்கொண்டிருந்தாலும், அவர்கள் கூட அதிசயம் நிகழ்த்தலாம். அதேதான் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் விஷயத்திலும். போதாததற்கு ஆஸ்டன் விலாவும் இந்த ஆண்டு நன்றாக பலமடைந்து வருகிறது. அதனால் நிச்சயம் டாப் 4 இடங்களுக்கு கடும் போட்டி நிலவும்.

Newcastle United

அடுத்த சீசனுக்குத் தயாராகும் வகையில் டிரான்ஸ்ஃபர் விண்டோவில் இதுவரை சுமார் 100 மில்லியன் பவுண்ட் செலவு செய்திருக்கிறது அந்த அணி. நடுகளத்தை பலப்படுத்தும் வகையில் ஏசி மிலன் மிட்ஃபீல்டர் சாண்ட்ரோ டொனாலியை 55 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியிருக்கிறது நியூகாசில். டொனாலி - கிமாரஷ் - ஜோயலின்டன் என நிச்சயம் பிரீமியர் லீகின் சிறந்த நடுகளங்கள் ஒன்றாகத் தெரிகிறது அந்த அணியின் மிட்ஃபீல்ட். அடுத்ததாக லெஸ்டர் சிட்டி அணியின் இளம் விங்கர் ஹார்வி பார்ன்ஸை 38 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியிருக்கிறது அந்த அணி. ஆலன் செயின்ட் மேக்ஸிமெய்னுக்கு (ASM) மாற்றாக அவர் அணியில் இணைந்திருக்கிறார். ASMஐ விட பார்ன்ஸால் அதிக கோல்கள் அடிக்க முடியும் என்பதால் அதுவும் ஒரு அப்கிரேட்.

Newcastle United

மற்ற அணிகள் போல் நிறைய டிரான்ஸ்ஃபர்களை நியூகாசில் இன்னும் மேற்கொள்ளவில்லை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக செய்ததுபோல் சரியான வீரர்களை வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த சீசன் சாம்பியன்ஸ் லீகில் விளையாடவிருப்பதால் அந்த அணி நிச்சயம் நல்ல பேக் அப் பிளேயர்களையும் வைத்திருக்கவேண்டும். அதனால், இன்னும் சில டிரான்ஸ்ஃபர்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2-3 நல்ல வீரர்களை வாங்கும்பட்சத்தில் நிச்சயம் மீண்டுமொரு நல்ல சீசனை நியூகாசில் யுனைடட் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.