Germany pt desk
கால்பந்து

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: கோல் மழை பொழிந்த ஜெர்மனி – புதிய வரலாற்று சாதனை

Kaleel Rahman

ஜெர்மனியில் நேற்று 17-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஜெர்மனி, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் இளம் வீரர் புளோரியன் விர்ட்ஸ் தனது அணிக்காக முதல் கோலை அடித்து யூரோ கால்பந்து வரலாற்றில் ஜெர்மனிக்காக குறைந்த வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Germany vs Scotland

இதையடுத்து ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஜமால் முசியாலா தனது அணிக்காக இரண்டாவது கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் முன்கள வீரரான இல்கே குண்டோகனை, ஸ்காட்லாந்து அணி வீரர் ரியான் போர்டியஸ் விதிமுறைகளை மீறி தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து ரியான் போர்டியஸ்க்கு நடுவர் ரெட் கார்டு வழங்கினார். அடுத்து கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஹய் ஹாவர்ட்ஸ் கோலாக மாற்றினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனி அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் ஹய் ஹாவர்ட்ஸ்க்கு மாற்று வீரராக களமிறங்கிய நிக்லஸ் ஃபுல்க்ரக் 68-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து ஜெர்மணி அணி வலுவான முன்னணி பெற்றது. ஆனால், ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் டிபன்டர் ருடிகர் தலையால் முட்டிய பந்து சேம் சைடு கோலாக மாறியது.

Germany

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 93-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் எம்ரே கேன் கோல் அடித்து அசத்தினார். முடிவில் ஜெர்மனி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் யூரோ கால்பந்து வரலாற்றில் தொடக்க ஆட்டத்தில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஜெர்மனி அணி படைத்துள்ளது. முன்னதாக 2021ஆம் ஆண்டு இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.