EURO CUP Antonio Calanni
கால்பந்து

EURO CUP | ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

துருக்கியா ஓரளவு நன்றாகவே விளையாடியிருந்தாலும், ஆஸ்திரியாவின் டெக்னிக்கல் ஆட்டத்துக்கு முன் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி.

Viyan

ஜெர்மனியில் நடந்து வரும் யூரோ 2024 தொடர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றை எட்டியிருக்கிறது. 24 அணிகள் மோதிய இந்தத் தொடரில் குரூப் சுற்றிலிருந்து 16 அணிகள் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கின்றன. இந்த 16 அணிகளில் அடுத்த கட்டத்துக்கு நகரப்போவது யார்? காலிறுதியில் கால் வைக்கப் போவது யார்?

போட்டி 1: ஸ்விட்சர்லாந்து vs இத்தாலி

ஏ பிரிவில் 5 புள்ளிகளோடு இரண்டாவது இடம் பிடித்த ஸ்விட்சர்லாந்து பி பிரிவில் இரண்டாம் பிடித்த இத்தாலியை (4 புள்ளிகள்) சந்திக்கிறது. ஸ்விட்சர்லாந்து நிறைய வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அணி. ஆனால் இத்தாலி டிஃபன்ஸில் பலமான அணி. அதேசமயம் இத்தாலி அதிக கோல் வாய்ப்புகளை உருவாக்காது. அதனால் இந்தப் போட்டி நிச்சயம் கடைசி வரை இழுபறியாகவே இருக்கும்.
வெற்றி வாய்ப்பு: ஸ்விட்சர்லாந்து 50 - 50 இத்தாலி
கவனிக்கவேண்டிய வீரர்: டேன் எண்டோயே (ஸ்விட்சர்லாந்து)

போட்டி 2: ஜெர்மனி vs டென்மார்க்

குரூப் சுற்றின் மூன்று போட்டிகளையும் வென்ற ஹோம் டீம் ஜெர்மனி, பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த டென்மார்க்கை சந்திக்கிறது. டென்மார்க்கோ 3 போட்டிகளையுமே டிராவே செய்தது. சொந்த மண்ணில் நல்ல ஃபார்மை வெளிப்படுத்திவரும் ஜெர்மனி, கோல் அடிக்கத் தடுமாறும் டென்மார்க்கை சந்திப்பது நிச்சயம் ஜெர்மனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியே! இருந்தாலும் டென்மார்க் டிஃபண்டர்களால் நிச்சயம் ஒரு அரண் அமைத்து எதிரணிகளைத் தடுக்க முடியும். அதை குரூப் சுற்றிலும் கூடக் காட்டியிருக்கிறார்கள். அதனால் ஆச்சர்யங்கள் அரங்கேறாது என்று சொல்ல முடியாது.
வெற்றி வாய்ப்பு: ஜெர்மனி 75 - 25 டென்மார்க்
கவனிக்கவேண்டிய வீரர்: ஜமால் மூசியாலா (ஜெர்மனி)

போட்டி 3: இங்கிலாந்து vs ஸ்லோவாகியா

குரூப் சுற்றில் மிகவும் சுமாராக விளையாடி பெரும் விமர்சனங்களை சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணி, இ பிரிவில் மூன்றாவது இடம் பிடித்த ஸ்லோவாகியாவை சந்திக்கிறது. டிஃபன்ஸில் சற்று பலமாகவே இருக்கும் ஸ்லோவாகியா, இங்கிலாந்துக்கு நிச்சயம் தலைவலி கொடுக்கும். இங்கிலாந்து பயிற்சியாளர் சவுத்கேட் அணியில் சில மாற்றங்களை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுவதால், அது இங்கிலாந்துக்கு சாதகமாகக் கூட அமையலாம். அட்டாக் சுமாராக இருந்தாலும் இங்கிலாந்தின் டிஃபன்ஸ் சிறப்பாக செயல்படுவதால், ஸ்லோவாகியா கோல் அடிப்பது எளிதாக இருக்காது.
வெற்றி வாய்ப்பு: இங்கிலாந்து 70 - 30 ஸ்லோவாகியா
கவனிக்கவேண்டிய வீரர்: ஹேரி கேன்

போட்டி 4: ஸ்பெய்ன் vs ஜார்ஜியா

மூன்று போட்டிகளில் ஒரு கோல் கூட விடாமல் அனைத்தையும் வென்று பி பிரிவில் முதலிடம் பிடித்தது ஸ்பெய்ன். அந்த அணி, எஃப் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்த ஜார்ஜியாவை சந்திக்கிறது. நாக் அவுட் சுற்றுக்கு ஜார்ஜியா முன்னேறியிருப்பது இதுவே முதல் முறை. அப்படியிருக்கையில் அசத்தல் ஃபார்மில் இருக்கும் முன்னாள் சாம்பியன்களுக்கு எதிராக அந்த அணியால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது மிகப் பெரிய சந்தேகம் தான். டிஃபன்ஸ், அட்டாக் என எல்லாமெ ஸ்பெய்னுக்குப் பக்காவாக இருக்கிறது. கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் முன்னணி வீரர்கள் அனைவருக்குமே ஓய்வு கொடுத்துமே கூட போட்டியை வென்றிருந்தது அந்த அணி. நிச்சயம் காலிறுதிக்கு முன்னேறுவது உறுதி.
வெற்றி வாய்ப்பு: ஸ்பெய்ன் 85 - 15 ஜார்ஜியா
கவனிக்கவேண்டிய வீரர்: லமீன் யமால்

போட்டி 5: பிரான்ஸ் vs பெல்ஜியம்

இந்த சுற்றின் மிகப் பெரிய போட்டி. இரண்டு அணிகளுமே தங்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கத் தவறியதின் விளைவாக இப்போது இந்த இரு அணிகளுமே நேருக்கு நேர் மோதவேண்டியிருக்கிறது. பிரான்ஸ் அணி அட்டாக்கில் சுமாராகவே செயல்பட்டிருக்கிறது. 3 போட்டிகளில் அவர்கள் இரண்டு கோல்களே அடித்திருக்கிறார்கள். பெல்ஜியமும் 2 கோல்கள் தான் அடித்திருக்கிறது. அநியாயத்துக்கும் தடுமாறுகிறது. இருந்தாலும் பிரான்ஸ் டிஃபன்ஸில் வழக்கம்போல் திடமாக இருக்கிறது. நாக் அவுட் என்று வரும்போது தங்கள் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிடும். லுகாகு கோல் அடிக்கத் தொடங்கினால் மட்டுமே பெல்ஜியமால் பிரான்ஸுக்கு சவால் கொடுக்க முடியும்.
வெற்றி வாய்ப்பு: பிரான்ஸ் 65 - 35 பெல்ஜியம்
கவனிக்கவேண்டிய வீரர்: கிலியன் எம்பாப்பே

போட்டி 6: போர்ச்சுகல் vs ஸ்லொவேனியா

மூன்று போட்டிகளையுமே டிரா செய்து வெற்றிகரமாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஸ்லொவேனியா, பலமான போர்ச்சுகலை சந்திக்கிறது. நிச்சயம் இந்தப் போட்டி போர்ச்சுகலுக்கு எளிதாக இருக்கும். 2 போட்டிகளின் முடிவிலேயே தங்கள் பிரிவில் முதலிடத்தை உறுதி செய்த போர்ச்சுகல், முன்னணி வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வு கொடுத்துவிட்டது. ரொனால்டோவின் கோலுக்கு வேறு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அது இந்தப் போட்டியில் நடக்கலாம்.
வெற்றி வாய்ப்பு: போர்ச்சுகல் 90 - 10 ஸ்லொவேனியா
கவனிக்கவேண்டிய வீரர்: பெர்னார்டோ சில்வா

போட்டி 7: ரொமானியா vs நெதர்லாந்து

பெல்ஜியம், உக்ரைன் அணிகள் இருந்த குரூப்பை வென்று அசத்தியிருக்கிறது ரொமானியா. இருந்தாலும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டி அவர்களுக்கு மிகப் பெரிய சவால் கொடுக்கும். பிரான்ஸ், ஆஸ்திரியா போன்ற அணிகளுக்கு எதிராகத் தடுமாறியிருந்தாலும் நெதர்லாந்து அணிக்கு இந்தப் போட்டி அவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்காது.
வெற்றி வாய்ப்பு: ரொமானியா 30 - 70 நெதர்லாந்து
கவனிக்கவேண்டிய வீரர்: கோடி காக்போ

போட்டி 8: ஆஸ்திரியா vs துருக்கியா

மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்கள், வீரர்கள் என அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது ஆஸ்திரியா. பிரான்ஸ், நெதர்லாந்து அணிகளைப் பின்னுக்குத்தள்ளி குரூப் சுற்றில் முதலிடம் பெற்ற அந்த அணி, துருக்கியாவுக்கு எதிராக தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். துருக்கியா ஓரளவு நன்றாகவே விளையாடியிருந்தாலும், ஆஸ்திரியாவின் டெக்னிக்கல் ஆட்டத்துக்கு முன் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி.
வெற்றி வாய்ப்பு: ஆஸ்திரியா 60 - 40 துருக்கியா
கவனிக்கவேண்டிய வீரர்: மார்சல் சபிட்சர்