கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின்போது, இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ’ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ‘பிளேயிங் 11’ பட்டியலை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியதாகவும், அதன்படி அந்த வீரர்களின் நட்சத்திரத்தை ஆராய்ந்து, ’இவர் இன்று நன்றாக விளையாடுவார், இவரை அணியில் சேர்க்க வேண்டாம்’ என்று பயிற்சியாளருக்கு ஜோதிடர் அறிவுரை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டித் தொடங்கும்போது, இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டபோது, மிகவும் சிறந்த வீரர்களின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை. ஏனென்றால், அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் குறிப்பிட்டிருந்ததுதான் காரணம். இது மட்டுமல்ல, பிளேயிங் 11 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரரையும் ஜோதிடரே பரிந்துரைத்துள்ளார். இதேபோல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற ஜோர்டான், கம்போடியா, ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கும் கால்பந்து அணியையும் ஜோதிடர் தேர்வு செய்து கொடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஒவ்வொரு போட்டித் தொடங்கும் முன்பும் பயிற்சியாளர், ஜோதிடரைத் தொடர்பு கொண்டுள்ளார். இதற்காக ஜோதிடருக்கு ரூ. 12 முதல் 15 லட்சம் வரை கட்டணமும் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல், இந்திய அணியின் தேர்வு முறையில் இருக்கும் வெளிப்படைத்தன்மையையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தவிர, இது மிகப்பெரிய கேலிக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதற்கு பல தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.