David De Gea Twitter
கால்பந்து

Manchester United-க்கு குட்பை சொன்ன கோல் கீப்பர் டேவிட் டீ கே! முடிவுக்கு வந்தது 12 வருட பந்தம்!

12 ஆண்டுகள் மான்செஸ்டர் யுனைடட் அணியின் அரணாய் விளங்கிய கோல் கீப்பர் டேவிட் டீ கே அந்த அணியில் இருந்து வெளியேறியிருக்கிறார். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்துவந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Viyan

32 வயதான டேவிட் டி கே, 2011ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்தார். அந்த இளம் வீரரின் மேல் நிறைய நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த நகர்த்தலை நகர்த்தினார், அப்போதைய யுனைடட் மேனேஜரான சர் அலெக்ஸ் ஃபெர்குசன். ஒரு மிகப் பெரிய அணியில் ஆடும் நெருக்கடியை ஆரம்பத்தில் உணர்ந்தார் டிகே. இருந்தாலும் விரைவிலேயே தன் திறமையை பிரீமியர் லீக் அரங்கில் நிரூபிக்கத் தொடங்கிய அவர், எட்வின் வேன் டெர் சார் போன்ற ஒரு ஜாம்பவானின் இடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்பதை உணர்த்தினார். 2011-12 சீசன் தொடங்கி, 2022-23 சீசன் வரை அந்த அணியின் நம்பர் 1ஆக தன் வேலையை சிறப்பாகச் செய்து அசத்திவந்த போதும், அவருக்கும் அந்த அணிக்குமான உறவு கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை.

பிளேயர் ஆஃப் தி இயர் 3 முறை வாங்கிய ஒரே யுனைடட் வீரர்!

ஃபெர்குசனின் ஓய்வுக்குப் பிறகு மான்செஸ்டர் யுனைடட் பெரிதாகத் தடுமாறியது. புதிய பயிற்சியாளர்கள் அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருக்க, அந்த அணி டாப் 4 இடங்களுக்குள் முடிக்கவே தடுமாறியது. மிட் டேபிள் அணிகளுக்கு எதிராகவும் திணறியது. கோல்கள் வருவது கடினமாக இருந்த அந்தக் காலகட்டத்தில், மொத்த அணியும் ஒன்றிணைந்து ஆட முடியாமல் இருந்த நேரத்தில் டீ கே தான் அந்த அணியின் ஆபத்பாந்தவனாய் விளங்கினார். 2013-14, 2014-15 சீசன்களில் அந்த அணியின் பிளேயர் ஆஃப் தி இயர் விருது வென்றது இவர்தான். ஆனால் 2015-16 சீசன் தொடக்கத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

David De Gea

அந்த சீசனின் முடிவில் டீ கேவின் ஒப்பந்தம் முடிவதாக இருந்தது. அப்போது அவர் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தது உலகின் பல முன்னணி கிளப்கள் அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருந்தன. அவர் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடாவிட்டால், அவரை ஃப்ரீ டிரான்ஸ்ஃபரில் இழக்க நேரிடும். ஆனால் இரண்டு தரப்புக்குமான பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. டீ கே புதிய ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தார். அதனால் சீசன் தொடக்கத்தில் அவரை பெஞ்சில் அமரவைத்தார் பயிற்சியாளர் லூயி வேன் கால். 'டீ கே தான் ஆட விருப்பமில்லை என்று தெரிவித்தார்' என்று கருத்துகள் கூட வெளியாகின. ஒருவழியாக சில தினங்களில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர், அந்த ஆண்டும் பிளேயர் ஆஃப் தி இயர் விருது வாங்கினார். மகத்தான அந்த அணியின் வரலாற்றில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பிளேயர் ஆஃப் தி இயர் விருது வென்ற முதல் வீரர் ஆனார். ஆனால் அந்த கொண்டாட்டங்கள் அதிக நாள்கள் தொடரவில்லை.

இடையில் ஏற்பட்ட தடுமாற்றம் : அணியிடையே உண்டான விரிசல்

2018 காலகட்டத்தில் டீ கேவின் ஃபார்ம் பெரும் கேள்விக்குறியானது. அவ்வப்போது அவர் செய்த தவறுகள் அணியையே பாதித்தது. 2018 உலகக் கோப்பையில் கூட மிகவும் சுமாராகவே செயல்பட்ட அவர், விரைவிலேயே ஸ்பெய்ன் அணியில் தன் இடத்தை இழந்தார். மான்செஸ்டர் யுனைடட் ரசிகர்களுக்கு மத்தியிலும் அவருடைய செல்வாக்கு குறையத் தொடங்கியது. அவ்வப்போது மிகச் சிறப்பான செயல்பாடுகள், ஆங்காங்கே சில சொதப்பல்கள் என சீரற்ற செயல்பாடுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார் டீ கே. இருந்தாலும் இந்த சீசன் வரையிலும் அணியில் தன் இடத்தை நிலைநிறுத்திக்கொண்டார்.

இந்த சீசனோடு அவர் ஒப்பந்தம் முடிவடைய இருந்த நிலையில், அதைத் தொடர்வதற்கான பேச்சுவார்த்தை தாமதமாகிக்கொண்டே இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு டீ கேவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒப்பந்தம் திரும்பப் பெறப்பட்டு புதிய ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்பு கூறப்பட்டிருந்த ஊதியத்தை விட மிகவும் குறைவான ஊதியம் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அணியுடன் தொடர விரும்பாத டீ கே, அணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

முடிந்து கொண்ட 12 வருட பந்தம்!

கடந்த இரு வாரங்களாகவே மான்செஸ்டர் யுனைடட் அணியும் இன்டர் மிலன் அணியின் கோல்கீப்பர் ஆண்ட்ரே ஒனானாவை வாங்க முயற்சி செய்துவருகிறது. ஒனானா மான்செஸ்டர் யுனைடட் அணியில் இணைய ஏற்கெனவே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், இன்டர் மிலன் அணியுடன் அவருக்கான தொகையை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சுமார் 50 மில்லியன் யூரோவுக்கு அவரை விற்க இன்டர் மிலன் தயாராக இருப்பதால், அவர் டீ கேவின் இடத்தை அடுத்து வரும் நாள்களில் நிரப்பிவிடுவார்.

இந்நிலையில் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கும், கோல் கீப்பர் டிகேவிற்கும் இடையிலான 12 வருட பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.