Australia - FIFA WorldCup Twitter
கால்பந்து

பெண்கள் உலகக்கோப்பை: கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு சென்று சரித்திரம் படைத்த ஆஸி!

ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயின், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய அணிகள் முன்னேறியிருக்கின்றன.

Viyan

ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயின், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய அணிகள் முன்னேறி அசத்தியிருக்கின்றன.

2023 ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே பல ஆச்சர்யமான முடிவுகளை அளித்துக்கொண்டிருக்கிறது இந்தத் தொடர். கனடா, பிரேசில், ஜெர்மனி, இத்தாலி என பல முன்னணி நாடுகள் குரூப் சுற்றிலேயே வெளியேறின.

மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஜமைக்கா போன்ற அணிகள் எதிர்பார்ப்பையும் மீறி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அதிக அதிர்ச்சிகள் இல்லாவிட்டாலும், நடப்பு சாம்பியன் அமெரிக்காவை பெனால்டிகளில் வெளியேற்றிய ஆச்சர்யம் தந்தது ஸ்வீடன். இங்கிலாந்து vs நைஜீரியா போட்டியுமே பெனால்டி வரை சென்றது. ஆனால் எப்படியோ அந்த ஷூட் அவுட்டில் இருந்து தப்பித்தது நடப்பு ஐரோப்பிய சாம்பியன்.

காலிறுதியில் ஸ்பெயினை வெற்றிக்கு அழைத்துச்சென்ற சல்மா!

இந்நிலையில், காலிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடந்தன. முதல் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என நெதர்லாந்தை எக்ஸ்டிரா டைமில் வீழ்த்தியது. முதல் 80 நிமிடங்கள் ஆட்டத்தில் கோலே இல்லாமல் செல்ல, ரெகுலர் டைமின் கடைசி 10 நிமிடங்களில் இரு அணிகளுமே கோலடித்தன. ஸ்பெயினின் மரியா கால்டென்டி 81வது நிமிடத்தில் கோலடிக்க, நெதர்லாந்தின் ஸ்டெஃபனி வேன் டெர் கிராட் ஆட்டத்தை சமனாக்கினார்.

Spain

நெதர்லாந்து அணி எக்ஸ்டிரா டைமில் ஒருசில வாய்ப்புகளைத் தவறவிட, மறுமுனையில் கவுன்ட்டர் அட்டாக் மூலம் கோலடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது ஸ்பெயின். அந்த அணியின் இளம் அட்டாக்கர் சல்மா பரயேலோ வெற்றிக்கான கோலை அடித்தார்.

முன்னாள் சாம்பியன் ஜப்பானை வெளியேற்றிய ஸ்வீடன்!

இரண்டாவது காலிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜப்பானை 2-1 என வீழ்த்தியது ஸ்வீடன். இந்தத் தொடரில் கோல்களாக விளாசிக்கொண்டிருந்த ஜப்பானுக்கும், அதுவரை கோலே விடாமல் இருந்த ஸ்வீடனுக்குமான போட்டி பரபரப்பாக இருந்தது. 32வது நிமிடத்தில் அமாண்ட இலெஸ்டெட் கோலடித்து ஸ்வீடனுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த உலகக் கோப்பையில் இது அவரின் நான்காவது கோல். 51வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டியும் கிடைத்தது. அதை கோலாக்கி அந்த அணி 2 கோல்கள் முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் இங்ரிட் அங்கல்டால்.

Sweden

சுமார் 70 நிமிடங்கள் பெரிதாக அட்டாக்கே செய்யாமல் இருந்த ஜப்பானுக்கு 76வது நிமிடத்தில் பெனால்டி கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பைத் தவறவிட்டார் ரிகோ யூகி. இருந்தாலும் அந்த அணி இறுதி நிமிடங்களில் கடுமையாகப் போராடியது. 87வது நிமிடத்தில் ஹொனோகா ஹயாஷி அந்த அணிக்காக முதல் கோலை அடித்தார். இந்த உலகக் கோப்பையில் ஸ்வீடன் விட்ட முதல் கோல் இதுதான். அதன்பிறகும் ஜப்பான் அணி போராடியது. ஆனால் அவர்களால் இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-1 என வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்வீடன். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் இரண்டு முன்னாள் சாம்பியன்களை (ரவுண்ட் ஆஃப் 16 - அமெரிக்கா, காலிறுதி - ஜப்பான்) வெளியேற்றியிருக்கிறது ஜப்பான்.

கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியா!

மூன்றாவது காலிறுதியில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி பிரான்சை எதிர்கொண்டது. இரு அணிகளும் கோலடிக்க கடுமையாக முயன்றும், எக்ஸ்டிரா டைம் முடியும் வரை கூட அவர்களால் கோலடிக்க முடியவில்லை. அதனால் ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது. பெனால்டியோ எதிர்பார்த்ததை விடப் பரபரப்பாகச் சென்றது. 5 வாய்ப்புகள் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருக்க, ஷூட் அவுட் சடன் டெத் வரை சென்றது.

Australia

அந்த சுற்றிலும் இரு அணிகளும் ஒரேபோல் செயல்பட, ஷூட் அவுட் பத்தாவது பெனால்டி வரை சென்றது. இறுதியில் 7-6 என பெனால்டியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய கால்பந்து வரலாற்றில் (ஆண்கள் & பெண்கள்) ஒரு அணி ஃபிஃபா உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைவது இதுவே முதல் முறை.

ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அடுத்த சாம்பியனுக்காக முன்னேறியது!

கடைசி காலிறுதிப் போட்டியில் ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்து, கொலம்பியாவைச் சந்தித்தது. 44வது நிமிடத்தில் மரியா சான்டோஸ் கோலடித்து கொலம்பிய அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் முதல் பாதி முடிவதற்கு முன்பே கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார் லாரன் ஹெம்ப். இரண்டாவது பாதியில் ஓரளவு கன்ட்ரோலில் இருந்த இங்கிலாந்து அணி, 63வது நிமிடத்தில் அலேசியோ ரூஸோ அடித்த கோல், அந்த அணி வெற்றி பெறுவதற்குப் போதுமானதாக இருந்தது.

England

ஆகஸ்ட் 15 நடக்கும் முதல் அரையிறுதியில் ஸ்பெயின் அணி ஸ்வீடனை எதிர்கொள்கிறது. ஆகஸ்ட் 16 நடக்கும் மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.