கடந்த சீசனின் பெரும்பகுதியில் முதலிடத்தில் இருந்த ஆர்செனல், இந்த சீசன் அந்த பிரீமியர் லீக் பட்டத்தை வென்றே தீருவது என்ற வேட்கையோடு களமிறங்கியிருக்கிறது. எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் அணியை எதிர்கொண்டது ஆர்செனல். தன் முதல் ஸ்டார்டிங் லெவனில் பல வித்தியாசமான முடிவுகள் எடுத்திருந்தார் ஆர்டேடா. கம்யூனிட்டி ஷீல்ட் போட்டியில் ஆடிய அணியில் கேப்ரியலுக்குப் பதிலாக எட்டி என்கிடியாவை களமிறக்கினார் அவர். அதனால் ஹாவர்ட்ஸ் நடுகளத்துக்கும், தாமஸ் பார்டே டிஃபன்ஸுக்கும் (ஹைப்ரிட் இன்வர்டட் டிஃபண்டர்) நகர்ந்தனர். அதனால் அதிக அட்டாகிங் ஆப்ஷன்களோடு களமிறங்கியது ஆர்செனல்.
போட்டியின் தொடக்கத்திலிருந்தே எதிர்பார்த்ததைப் போல நாட்டிங்ஹம் கோல் போஸ்ட்டை ஆர்செனல் அட்டாக்கர்கள் முற்றுகையிட்டனர். அதன் பலனாக 26வது நிமிடத்தில் அந்த அணி முதல் கோலை அடித்தது. இடது விங்கில் அற்புத மேஜிக் செய்து, பெனால்டி ஏரியாவுக்குள் இருந்த என்கிடியாவுக்கு பேக் ஹீல் மூலம் பாஸ் கொடுத்தார் கேப்ரியல் மார்டினெல்லி. அதை சிறப்பாக ஃபினிஷ் செய்து இந்த சீசனில் தன் அணியின் முதல் கோலை அடித்தார் என்கிடியா. அதிலிருந்து ஃபாரஸ்ட் வீரர்கள் சுதாரிப்பதற்குள்ளாகவே இரண்டாவது கோலை அடித்தது ஆர்செனல். இம்முறை மேஜிக் நிகழ்த்தியது புகாயா சகோ! முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது ஆர்செனல்.
முதல் பாதியைப் போல் அந்த அணியால் இரண்டாவது பாதியில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. ஃபாரஸ்ட் வீரர்கள் கடுமையாகப் போராட 82வது நிமிடத்தில் அந்த அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. 82வது நிமிடத்தில் கோலடித்து ஆர்செனலின் முன்னிலையைக் குறைத்தார் அவோனியி. இறுதியில் 2-1 என வெற்றி பெற்றது ஆர்செனல்.
வெற்றியோடு தொடங்கியிருந்தாலும், இரண்டு கோல்கள் மட்டுமே அடித்தது, கிளீன் ஷீட்டை தவறவிட்டது, டிஃபண்டர் யுரியன் டிம்பருக்குக் காயம் ஏற்பட்டது போன்ற விஷயங்கள் ஆர்டேடாவுக்கு சற்று கவலை அளிக்கவே செய்யும். இருந்தாலும் மார்டினெல்லி, சகா போன்றவர்கள் விளையாடிய விதம் அந்த அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகம் கொடுக்கவே செய்திருக்கிறது.
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளுள் ஒன்றான பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான், அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, லுட்டன் டவுன் அணியை 4-1 என வீழ்த்தி அசத்தியது. அமெக்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் 36வது நிமிடத்தில் சாலி மார்ச் மூலம் முதல் கோலை அடித்தது அந்த அணி. முன்னிலை பெற்றிருந்தாலும் அதன் பிறகு வெகு நேரம் அவர்களால் இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை. 71வது நிமிடத்தில் பெட்ரோ பெனால்டி மூலம் கோலடித்து முன்னிலையை அதிகப்படுத்தினார். 81வது நிமிடத்தில் லுட்டனுக்கும் பெனால்டி கிடைத்தது. அதை கார்ல்டன் மோரிஸ் கோலாக்கினார். முன்னிலை குறைந்திருந்தாலும் கடைசி 10 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்தது பிரைட்டன். மாற்று வீரர்களாகக் களமிறங்கிய அடிங்ரா, எவான் ஃபெர்குசன் இருவருமே கோலடித்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட நியூகாசில் யுனைடட் vs ஆஸ்டன் விலா போட்டியில் கோல் மழை பொழிந்தது. மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் 5-1 என அபார வெற்றி பெற்றது நீயூகாசில். தன் முதல் பிரீமியர் லீக் போட்டியில், ஆறாவது நிமிடத்திலேயே தன் முதல் பிரீமியர் லீக் கோலை அடித்தார் சாண்ட்ரோ டொனாலி. ஆனால் ஆஸ்டன் விலா அட்டாக்கர் மௌசா டியாபி தன் பங்குக்கு தன் அறிமுக கோல் மூலம் ஆட்டத்தை சமன் செய்தார். ஆனால் அதன்பிறகு நியூகாசில் அணியை கை ஓட்ங்கியது.
ஸ்டிரைக்கர் ஈசாக் இரண்டு கோல்கள் அடித்தார். மாற்று வீரர்களாகக் களமிறங்கிய கேலம் வில்சன், ஹார்வி பார்ன்ஸ் இருவரும் தங்கள் பங்குக்கு ஆளுக்கு ஒரு கோல் அடிக்க, 5-1 என வெற்றி பெற்றது அந்த அணி. 4 என்ற கோல் வித்தியாசம் அந்த அணியை புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கும் அழைத்துச் சென்றது.
பிரீமியர் லீக் கேம்வீக் 1 முடிவுகள் இதுவரை:
பர்ன்லி 0-3 மான்செஸ்டர் சிட்டி
ஆர்செனல் 2-1 நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்
போர்ன்மௌத் 1-1 வெஸ்ட் ஹாம் யுனைடட்
பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் 4-1 லுட்டன் டவுண்ட்
எவர்டன் 0-1 ஃபுல்ஹாம்
ஷெஃபீல்ட் யுனைடட் 0-1 கிறிஸ்டல் பேலஸ்
நியூகாசில் யுனைடட் 5-1 ஆஸ்டன் விலா