விளையாட்டு

கையில் சேகுவேரா.. காலில் காஸ்ட்ரோ டாட்டூ - கலகக்காரர் மரடோனா !

கையில் சேகுவேரா.. காலில் காஸ்ட்ரோ டாட்டூ - கலகக்காரர் மரடோனா !

EllusamyKarthik

ஒட்டுமொத்த கால்பந்தாட்ட ரசிகர்களும் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான டீகோ மரடோனா மரணத்திற்கு அஞ்சலி செலுத்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அவர் ரசிகர்கள் RIP என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மரடோனாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தித்து வருகின்றனர். 

1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. எட்டு வயதில் Estrella Roja கிளப் அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார். பிரேசிலின் ரிவேலினோ மற்றும் மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ஜியார்ஜ் பெஸ்ட் தான் மாரடோனாவின் இன்ஸ்பைரேஷன். 

15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது. 

மரடோனா அரசியல் பார்வை 

சமூக சமத்துவத்தை ஆதரிக்கும் இடதுசாரிகளை ஆதரிப்பது தான் மாரடோனா முன்னெடுத்த அரசியல். பிரபலங்களையும் அரசியலையும் தனித்தனியே பிரிக்க முடியாது. சமயங்களில் சிலர் அமைதியாகவே  தங்களது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் நகர்ந்துவிடுவார்கள். ஆனால் மாரடோனா அதிலிருந்து மாறுபட்டவர். சேகுவாராவை வலது கையிலும்,  ஃபிடல் கேஸ்ட்ரோவை இடது காலிலும் பச்சை குத்தி வைத்துள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மாரடோனா குரல் கொடுத்துள்ளார். 2005 இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்துள்ளார். அதன் காரணமாகவே கடவுளின் தேசமான கேரளத்தில் கால்பத்தாட்ட கடவுளான மாரடோனாவுக்கு தனித்துவமிக்க ரசிகர் கூட்டமே உள்ளது. ஏழை மக்களுக்காகவும், ஓடுக்கப்படுகின்ற நாடுகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார்.. அவரது ஆட்டமும் ஒரு கவிதை போல் அவ்வளவு அழகாக இருக்கும் என்று சொல்வார்கள்.

மெஸ்ஸியை உருவாக்கியவர்

மாடர்ன் டே கால்பந்தாட்ட மாவீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸியை உருவாக்கியவர் மாரடோனா தான். அவரை மெஸ்ஸியின் ராஜ குரு என்று சொல்லலாம். ‘மாரடோனா விளையாடிய வீடியோவை பார்த்து தான் கால்பந்து விளையாட பழகினான்’ என மெஸ்ஸியின் அப்பா ஜார்ஜ் சொல்லியதே அதற்கு சான்று. 

மெஸ்ஸியை புகழ்ந்துள்ள மாரடோனா சமயங்களில் விமர்சிப்பதும் உண்டு. இருவரும் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியை சர்வதேச அளவில் தூக்கி சுமந்த கொம்பன்கள். 

பீலே அதிக கோல் அடித்தவராக இருக்கலாம்.. ஆனால், மக்களால் கொண்டாடப்பட்ட கால்பந்தாட்ட வீரராக திகழ்பவர் மரடோனா. அவர் உடல் அளவில் பூவுலகை விட்டு பிரிந்திருந்தாலும் கால்பந்தாட்ட ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்வாங்கு வாழ்வார். 

RIP மாரடோனா...