விளையாட்டு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உடனடியாக போட்டிக்கு கிளம்பிய சமீஹா பர்வீன்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உடனடியாக போட்டிக்கு கிளம்பிய சமீஹா பர்வீன்

நிவேதா ஜெகராஜா
சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, இன்று அனுமதி பெற்றிருந்தார் குமரி மாற்றுத் திறனாளி மாணவி சமீஹா பர்வீன். இந்த மாணவிக்கு நீதிமன்றம் வாயிலாக அனுமதி கிடைத்ததால், மாணவியின் சொந்த கிராமமான கடையால் மலையோர கிராம மக்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, போட்டியில் பங்கேற்பதற்காக இன்று இரவே சென்னைக்கு கிளம்பியுள்ளார் மாணவி சமீஹா.
குமரி மாவட்டம் கடையாலுமூடு மலையோர கிராமத்தை சேர்ந்த சமீஹா பர்வீன். இந்த 18 வயது மாற்று திறனாளி மாணவி இந்த மாதம் 23-ம் தேதி போலந்து நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்பதற்காக, டெல்லியில் நடைபெற்ற தகுதி போட்டியில் கலந்துக்கொண்டிருந்தார். அதில் வெற்றி பெற்றும், அந்த மாணவிக்கு போலந்து போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து, மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், இந்த மாணவியை போலந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க வைக்க இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இன்று உத்தரவிட்டார்.
இதனால் இன்று குமரி மலையோர பகுதியான கடையாலுமூடு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சமீஹா பர்வீன் வீட்டில் மலையோர கிராம மக்கள் வந்து அந்த மாணவிக்கு பாராட்டையும் தெரிவித்தனர். மேலும் போட்டியில் பங்கேற்க இன்று இரவே சமீஹா பர்வீன் தனது தாயாருடன் சென்னைக்கு கிளம்பியுள்ளார். சென்னைக்கு செல்லும் மாணவி அங்கிருந்து டெல்லி சென்று, பின் அங்கிருந்து போலந்து நாட்டுக்கு செல்ல உள்ளார்.