விளையாட்டு

நடுவர்களுடன் தொடரும் தோனியின் வாதம் : மறக்கமுடியாத 5 சம்பவங்கள்..!

நடுவர்களுடன் தொடரும் தோனியின் வாதம் : மறக்கமுடியாத 5 சம்பவங்கள்..!

webteam

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் வொயிட் கொடுத்ததற்கு தோனி கோபப்பட்டது பேசு பொருளாகியுள்ளது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஷர்துல் தகூர் 19வது ஓவரை வீசியபோது 2வது பந்து வொயிட் ஆனது. அடுத்த பந்தும் வொயிட் என அம்பயர் கொடுக்க முன்வர, உடனே தோனி கோபமடைந்தார். அப்போது அம்பயர் வொயிட் கொடுக்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நடுவரிடம் தோனி கோபப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே பலமுறை நடுவர்களிடம் கோபப்பட்டிருக்கிறார். அதில் குறிப்பிடத்தகுந்த 5 சம்பவங்களை காணலாம்.

2012ஆம் ஆண்டு சிபி சீரியஸ் :

2012ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிபி தொடரில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது ரெய்னா வீசிய பந்தில் மைக்கெல் ஹஸ்ஸியை தோனி ஸ்டெம்பிங் செய்தார். மூன்றாவது நடுவரின் பார்வைக்கு அது செல்ல, பின்னர் அவுட் கொடுக்கப்பட்டது. மூன்றாவது நடுவரின் முடிவில் தவறு இருப்பதாக ஹஸ்ஸியை மீண்டும் ஆடுவதற்கு நடுவர் பில்லி பவ்டென் அழைத்தார். அப்போது கோபமடைந்த தோனி நடுவர் பவ்டெனுடன் வாதம் செய்தார்.

2013ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி :

2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. 3வது ஒருநாள் போட்டியில் அஸ்வின் வீசிய ஓவரில் நடுவர் ஷாம்சுதின் வொயிட் கொடுக்க, அப்போது நடுவருடன் தோனி வாதம் செய்தார். பின்னர் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

2015ஆம் ஆண்டு இந்தியா - தென்னாப்பிரிக்கா :

2015ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா பின்னடைவை சந்தித்தது. 3வது போட்டியில் நடுவர் வினீத் குல்கர்னியின் அம்பயரிங் மோசமாக இருந்ததாக இந்திய அணியினர் புகார் தெரிவித்திருந்தனர்.

அடுத்த போட்டியில் ஹர்பஜன் வீசிய பந்தில் ஃபார்ஹான் பெஹார்டியன் டிப் கேட்ச் ஆனது போல இருந்தது. அதற்கு ஹர்பஜன் நடுவரிடம் லேசாக அவுட் கேட்க, தோனி ஆவேசத்துடன் அவுட் கேட்டார். அப்போது குல்கர்னி அவுட் கொடுத்தார். தோனி கொடுத்த அழுத்தத்தினால் தான் குல்கர்னி அவுட் கொடுத்ததாக சர்ச்சையானது.

2019 ஐபிஎல், சிஎஸ்கே - ஆர்ஆர் மோதல் :

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிராக சேஸிங் செய்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஃபுல் டாஸாக சான்ட்னரின் இடுப்புக்கு மேல் வந்தது. அந்த பந்தை நோ-பால் ஆக நடுவர் கொடுப்பார் என எதிர்பார்த்தபோது, நோ-பால் கொடுக்கப்படவில்லை. அப்போது மைதானத்திற்குள் நடந்து சென்று நடுவரிடம் தோனி வாதிட்டார்.

நடப்பு ஐபிஎல் :

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் வீசிய 18வது ஓவரில் டாம் குரான் டிப் கேட்ச் ஆனார். நடுவரும் அவுட் கொடுத்தார். பின்னர் ரீப்ளேயில் பார்த்தபோது, பந்து கீழே குத்திய பின்னரே அதை தோனி பிடித்தது உறுதி செய்யப்பட்டதால் அவுட் திரும்பப்பெறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தோனி ராஜஸ்தான் அணிக்கு ரிவ்யூ ஆப்ஷன் இல்லாமல் எப்படி 3வது நடுவரிடம் ரீப்ளே செய்ய சொன்னீர்கள் என நடுவரிடம் கோபப்பட்டார்.