டெஸ்ட் போட்டியில், முதல் 9 இன்னிங்ஸில், 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் பெற்றுள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த நியுசிலாந்து, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்த சொன்னது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 21 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
அப்போது களம் புகுந்த அனுபவ வீரர் ஜோ ரூட்டும், இளம் அதிரடி பேட்டர் ஹாரி புரூக்கும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடியாக ஆடிய ஹாரி புரூக் 107 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மேற்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக், இரட்டைச் சதத்தை நோக்கி நகர்ந்தார். இதற்கிடையில் பொறுமையாக ஆடிய ரூட் சதம் அடித்து அசத்தினார். ரூட் 101 ரன்னிலும், புரூக் 184 ரன்னிலும் இருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த இணை இதுவரை 4வது விக்கெட்டுக்கு 294 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது வரை இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 315 ரன்கள் குவித்துள்ளது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை நிற்காத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அதேநேரத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற ஹாரி ப்ரூக் இரண்டாவது போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இந்த நிலையில் ஹாரி புரூக் விளையாடியுள்ள 6 போட்டிகளில் (9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 போட்டிகளுக்குள் 4 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹார் புரூக் இணைந்துள்ளார்.
அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி ஹாரி புரூக் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரரான வினோத் காம்ப்ளி தனது முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை ஹாரி புரூக் முறியடித்துள்ளார். முதல் 9 இன்னிங்ஸில், 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஹாரி புரூக் பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் களத்தில் இருப்பதால், இந்த ரன் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. இவரை, சன் ரைசர்ஸ் அணி 13.25 கோடிக்கு ஐபிஎல்லில் ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.