நடப்பு டி20 உலகக்கோப்பையின் முதல் ஹாட்டிரிக் விக்கெட்டை அமீரக அணிக்காக தமிழக வீரர் கார்த்திக் மெய்யப்பன் வீழ்த்தியுள்ளார்.
16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 16 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் விளையாடின. இலங்கை அணி 79 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி இலங்கைக்கு எதிராக முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கையின் ஓப்பனர்களாக களமிறங்கிய பதும் நிசங்கா மற்றூம் குஷால் மெண்டீஸ் ஆகிய இருவரும் நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடி அணிக்கு வலுவான துவக்கம் அமைத்து கொடுத்தனர்.
அர்யன் லக்ரா பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி மெண்டீஸ் நடையைக் கட்ட, நிசங்காவுக்கு துணை நிற்கும் பொறுப்பை தனஞ்செயா டி செல்வா ஏற்றார். பொறுப்பாக விளையாடி கொண்டிருந்த தனஞ்செயா, அப்சல் கான் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரால் அசத்தல் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை பேட்டர்களுக்கு வில்லனாக வந்தார் தமிழக வீரர் கார்த்திக் மெய்யப்பன். பனுகா ராஜபக்சே, அசலன்கா ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் கார்த்திக். அடுத்த விக்கெட் வீழ்த்தினால் ஹாட்டிரிக் எனும் வேளையில் களத்திற்குள் நுழைந்தார் இலங்கை கேப்டன் ஷனாகா. ஆனால் அவரையும் அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாக்கி இந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்-டிரிக்கை வீழ்த்தி சாதனை படைத்தார் கார்த்திக் மெய்யப்பன்.
யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?
தற்போது 22 வயதை கடந்து ஐக்கிய அரபு அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் கார்த்திக் மெய்யப்பன் அக்டோபர் 8, 2000 அன்று சென்னையில் பிறந்தவர். சென்னை, அபுதாபி, துபாய் என பல நகரங்களில் தனது இளம்பருவத்தை கழித்த இவரது குடும்பம் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிரந்தரமாக செட்டில் ஆனது. பள்ளியில் படிக்கும் போதே இவரது கவனம் திரும்ப, தனது அசாத்திய திறமையால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் அமீரக அணிக்காக விளையாடத் துவங்கினார்.
2019 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் அமீரக அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார். அதே ஆண்டின் இறுதியில் வயது வந்தோருக்கான அமீரக அணியில் இணைந்து தற்போது வரை கிரிக்கெட்டில் தனி முத்திரையை பதித்து வருகிறார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று அவர் வீழ்த்திய இந்த ஹாட்டிரிக் விக்கெட் தனி மகுடம் என்றே சொல்லலாம்.