விளையாட்டு

முதன்முதலில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தது யார் தெரியுமா?

முதன்முதலில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தது யார் தெரியுமா?

webteam

நவீனகால கிரிக்கெட்டில் ஒரே ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் என்பது எளிதாகிவிட்டது. ஆனால், இந்த சாதனையை 1968லேயே ஒரு வீரர் படைத்துவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா?.
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கேரி சோபர்ஸ் தான், இந்த சாதனையை முதன்முதலில் நிகழ்த்தி சாதித்துக் காட்டியவர். தி நாட்ஸ் கிளப் அணியின் கேப்டனான சோபர்ஸ், கிளமோர்கன் அணிக்கு எதிரான முதல்தர கிரிக்கெட்டில் இந்த சாதனையை நிகழ்த்தினார். செயிண்ட் ஹெலென் மைதானத்தில் 1968 ஆகஸ்ட் 31ல் இவ்விரு அணிகள் மோதிய போட்டி நடந்தது. முதலில் பேட்டிங் செய்த தி நாட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது களத்தில் இருந்த சோபர்ஸ், விரைவாக ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்ய எண்ணினார்.
அப்போது பந்துவீச வந்த கிளமோர்கன் அணியின் மால்கம் நாஷ் பந்துவீச வந்தார். இடதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான அவரை சுழற்பந்து வீசுமாறு கேப்டன் டோனி லீவிஸ் பணித்தார். இதையடுத்து நாஷ் சுழற்பந்து வீச, அந்த ஓவரின் முதல் 2 பந்துகளை மிட் விக்கெட் திசையில் எல்லைக்கோட்டுக்கு வெளியே அடித்தார் சோபர்ஸ். இதனால் மூன்றாவது பந்தினை ஆஃப் சைடில் வைடாக நாஷ் வீச, அதையும் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார் சோபர்ஸ். நேராக வீசப்பட்ட 4ஆவது பந்தினை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸராக்கி அசத்தினார். நாஷ் வீசிய 5ஆவது பந்தினை லாங் ஆஃப் திசையில், சோபர்ஸ் அடித்தார். ஆனால், பேட்டில் சரியாக மீட் ஆகாதததால் பந்து எல்லைக்கோடு அருகே நின்றிருந்த ரோஜர் டேவிஸ் சரியாகக் கணித்து கேட்ச் பிடித்தார். இதையடுத்து பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கிய சோபர்ஸ், ரோஜர் டேவிஸ் எல்லைக்கோட்டைத் தாண்டியதை மிகவும் தாமதமாகவே அறிந்துகொண்டார். இதையடுத்து மீண்டும் களமிறங்கிய சோபர்ஸ், நாஷின் 6ஆவது பந்தினை மிட் விக்கெட் திசையில் சிக்ஸராக்கி சாதனை படைத்தார்.