விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து: 1930 முதல் 2018 வரை.. இதுவரை கோப்பை வென்றவர்கள் யார் யார்?

உலகக் கோப்பை கால்பந்து: 1930 முதல் 2018 வரை.. இதுவரை கோப்பை வென்றவர்கள் யார் யார்?

JustinDurai

கத்தாரில் நடந்துவரும் 22-வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக 1930 முதல் 2018ஆம் ஆண்டு வரை உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை குறித்து இங்கே பார்க்கலாம்..

1930: உருகுவே

உருகுவே தலைநகர் மான்டிவீடியோவில் நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே முதல் ஃபிஃபா உலகக் கோப்பையை வென்றது. முதல் தொடரில் 13 அணிகள் கலந்துகொண்டன. ஐரோப்பாவில் இருந்து 4 அணிகள் மட்டுமே பங்கேற்றன.

1934: இத்தாலி

இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தி கோப்பையை உச்சி முகர்ந்தது இத்தாலி. முதல் உலகக் கோப்பை தொடரை பல ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்ததால், 2-வது தொடரை நடப்பு சாம்பியன் உருகுவே புறக்கணித்தது.

1938: இத்தாலி

இறுதிப் போட்டியில் ஹங்கேரியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தாலி தனது இரண்டாவது கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடர் மூலமாக இந்தோனேசியா, உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் ஆசிய அணியாக திகழ்ந்தது.

1950: உருகுவே

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக் கோப்பை தொடர் இது. இறுதிப்போட்டியில் பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற உருகுவே 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1954: ஜெர்மனி

ஹங்கேரிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1958: பிரேசில்

இறுதிப் போட்டியில் ஸ்வீடனை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது பிரேசில். இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணிக்காக அறிமுகமாகிய பீலே என்ற 17 வயதான வீரர் 6 கோல்கள் அடித்து கவனம் ஈர்த்தார்.

1962: பிரேசில்

சிலி தலைநகர் சாண்டியாகோவில் நடந்த இறுதிப் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பிரேசில்.

1966: இங்கிலாந்து

8-வது உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து நடத்தியது. அதில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இங்கிலாந்துக்கு கிடைத்த ஒரேயொரு சாம்பியன் பட்டம் அது. அதன்பின்னர் இங்கிலாந்து உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறவில்லை. இந்த உலகக் கோப்பையில் வடகொரியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் அறிமுகமாகின.

1970: பிரேசில்

9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மெக்ஸிகோ நடத்தியது. இந்த தொடரில் தான் வீரர்களை எச்சரிப்பதற்காக மஞ்சள் அட்டையும், அவர்களை வெளியேற்றுவதற்காக சிவப்பு அட்டையும் காண்பிக்கும் முறையை ஃபிபா அறிமுகப்படுத்தியது. இறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது பிரேசில். சாம்பியன் பட்டத்தை 3 முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரேசில் வெற்றது.

1974: ஜெர்மனி

இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மேற்கு ஜெர்மனி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த தொடரில் புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது.

1978: அர்ஜென்டினா

உலகக் கோப்பை கால்பந்து 11வது சீசன் அர்ஜென்டினாவில் நடந்தது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 3–1 என வென்று, முதன்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா. இத்தொடரில் 6 கோல்கள் அடித்து அசத்திய அர்ஜென்டினா வீரர் மரியோ கெம்பஸ், ‘கோல்டன் ஷூ’ விருதை வென்றார்.

1982: இத்தாலி

12-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டதால் பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க அணிகளுக்கு உலகக் கோப்பையில் விளையாட முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது. இறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை இத்தாலி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில்தான் பெனால்டி ஷூட்-அவுட் முறை முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.

1986: அர்ஜென்டினா

இந்த உலக கோப்பையை பொறுத்தவரை கதாநாயகனாக ஜொலித்தவர், 25 வயதான அர்ஜென்டினா கேப்டன் டியாகோ மரடோனா தான். இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2–வது முறையாக உலக சாம்பியன் கிரீடத்தை ஏந்தியது அர்ஜென்டினா .

1990: ஜெர்மனி

ரோமில் நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மேற்கு ஜெர்மனி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

1994: பிரேசில்

இந்த போட்டியில் தான் உலகக் கோப்பை வரலாற்றிலேயே இறுதி ஆட்டம் 'பெனால்டி' முறையில் தீர்மானிக்கப்பட்டது. பிரேசில் 3-2 என இத்தாலியை வென்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

1998: பிரான்ஸ்

பிரான்ஸில் நடந்த 16-வது உலகக் கோப்பையில்தான் 24 அணிகள் எண்ணிக்கை 32 அணிகளாக மாற்றப்பட்டது. இந்த போட்டியில் தான் முதன்முறையாக நான்காவது நடுவர் மின்னணு பலகைகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். மேலும் முதன்முறையாக கோல்டன் கோல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வீரரின் பின்னால் இருந்து பந்தை பறிக்க முயல்வது தடை செய்யப்பட்டது. இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 3-0 என பிரேசிலை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் ஆனது. அந்த அணியின் ஜிடேன் ஜீனடேனின் அற்புதமான ஆட்டத்தால் பிரான்ஸ் பட்டம் வென்றது.

2002: பிரேசில்

ஃபிஃபா உலகக் கோப்பை முதன்முறையாக 2002ஆம் ஆண்டில் ஆசியாவில் நடைபெற்றது. இப்போட்டியை தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. மேலும் இப்போட்டி 2 நாடுகள் இணைந்து நடத்தும் முதலாவது போட்டியாகும். இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த பிரேசில் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைகளில் ஏந்தியது.

2006: இத்தாலி

இத்தாலி – பிரான்ஸ் அணிகள் இடையிலான இறுதிப்போட்டியில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. கூடுதல் நேரத்தில் யாரும் கோல் போடவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட்–அவுட் முறையில் தங்களுக்குரிய 5 வாய்ப்பையும் கோலாக்கி அசத்திய இத்தாலி அணி 5–3 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்த ஆட்டத்தில்தான் பிரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மார்கோ மெட்டராசியை தலையால் முட்டி கீழே தள்ளினார். இதையடுத்து ஜிடேனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

2010: ஸ்பெயின்

ஆப்பிரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை இதுவாகும். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் –நெதர்லாந்து அணிகள் சந்தித்தன. வழக்கமான நேரத்தில் கோல் விழவில்லை. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் ஆந்த்ரே இனியஸ்டா வெற்றிக்கான கோலை அடித்தார். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பையை வென்ற அணிகளின் வரிசையில் 8–வது அணியாக ஸ்பெயின் இணைந்தது.

2014: ஜெர்மனி

இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.

2018: பிரான்ஸ்

இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த பிரான்ஸ், 2வது முறையாக கோப்பையை வென்றது, இதன் மூலம் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் கேப்டனாகவும் மேலாளராகவும் உலகக் கோப்பையை வென்ற 2வது வீரர் ஆனார்.

தவற விடாதீர்: மிஸ்ஸான மொராக்கோவின் கடைசி சான்ஸ்! மூன்றாமிடம் பிடித்து அசத்திய குரோஷியா!