உலகக் கோப்பை அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறாதது குறித்து விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைக்கான கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அணி அறிவித்த தருணத்தில் இரண்டு விதமான அதிருப்தி வெளிப்பட்டது. ஒன்று, விக்கெட் கீப்பிங்கிற்கு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பலரும் ஏற்றுக் கொண்டாலும் ரிஷப் பண்டை எடுத்திருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர். மூத்த வீரர் என்பதால் தினேஷ் கார்த்திக்கிற்கு பெரிய எதிர்ப்பு வரவில்லை.
ஆனால், 4வது இடத்திற்கான போட்டியில் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிக அளவில் அதிருப்தி வெளிப்பட்டது. ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலேயே கருத்து தெரிவித்து இருந்தது. அம்பத்தி ராயுடே விஜய் சங்கரின் தேர்வை விமர்சிக்கும் வகையில் கிண்டலாக கருத்து தெரிவித்தார். பலரும் அனுபவ வீரர் ராயுடு இருக்கையில், இளம் அறிமுக வீரர் விஜய் சங்கர் ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். “இது அம்பத்தி ராயுடுவிற்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கும். ஏனெனில் அணியில் அவர் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு இருந்ததாகவே நான் கருதினேன்.
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து அம்பத்தி ராயுடு அணியில் 4வது வீரராக பேட்டிங் செய்தார். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரில் அதிக ரன்களையும் எடுத்தார். அனுபவம் வாய்ந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய பிறகும் ஏன் அவரை எடுக்கவில்லை என்பது கொஞ்சம் ஆச்சர்யமாகதான் உள்ளது.
இது மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும். 2003ம் ஆண்டில் நானும் இந்த வலியை உணர்ந்தேன். இருப்பினும், ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக வலிமையுடன் மீண்டு வருவது முக்கியமானது. ராயுடுவும் மீண்டும் வருவார் என நம்புகிறேன்” என்றார் லக்ஷ்மண்.
2003ம் உலகக் கோப்பையில் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. 15 பேர் கொண்ட அந்த அணியில் விவிஎஸ் லக்ஷ்மணுக்கு பதில் தினேஷ் மோங்கியா தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிவரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.