விளையாட்டு

"சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்"-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்

"சில நினைவாற்றலை இழந்துவிட்டேன்"-தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் ட்வீட்

jagadeesh

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் பீல்டிங்கின் போது தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சில நினைவாற்றலை இழந்துவிட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஎஸ்எல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 19வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இந்தத் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் டூப்ளசிஸ். இதில் நேற்றையப் போட்டியில் முதல் இன்னிங்சின் 7-வது ஓவரின் போது, பெஷாவர் அணி பேட்ஸ்மேன் பவுண்டரி லைனுக்கு பந்தை விரட்டினார். அப்போது பீல்டிங்கில் இருந்த கிளாடியேட்டர்ஸ் அணி வீரர்கள் டூப்ளசிஸ் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் பந்தை தடுக்க முயன்றனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஹஸ்னைன் காலில், டூப்ளசிஸ் தலை வேகமாக மோதியது. இதனால், படுகாயமடைந்த டூப்ளசிஸ், வெளியில் சில நேரம் உட்காரவைக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில்,  தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுக்கிறார் டூப்ளசிஸ்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள டூப்ளசிஸ் " எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நான் மீண்டும் குணமடைந்து வருகிறேன். சில நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் களத்தில் இறங்குவேன் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.