இந்திய கிரிக்கெட் அணியில் பரீட்சார்த்த முயற்சிகள் தொடரும் என்று அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறினார்.
இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. 2-வது போட்டியில் இந்திய அணி சோதனை முயற்சியாக பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்தது. 2019-ம் ஆண்டு உலக கோப்பைக்கு தயாராகுவதற்காக, இதுபோன்ற பரிசோதனை முயற்சிகள் தொடரும் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’கடந்த போட்டியில் சில விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அதே மாதிரியான முயற்சி இந்த போட்டியிலும் தொடரும். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா சிறப்பாக பந்து வீசினார். இதனால் நமது அணியின் மிடில் வரிசை சீர்குலைந்தது. இது போன்ற தவறுகளை அடுத்து வரும் போட்டிகளில் செய்யமாட்டோம். பீல்டிங்கை பொறுத்தவரை கடந்த 3, 4 வருடங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என்றும் ஸ்ரீதர் குறிப்பிட்டார்.
பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அங்கு மாலையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.