விளையாட்டு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ‘டாம் மூடி’

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ‘டாம் மூடி’

rajakannan

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடியும் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலமும் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது. 

இந்தப் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கபில்தேவ், அன்ஷுமன் கெயிவாட் (Anshuman Gaekwad), சாந்தா ரங்கசாமி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை வரும் ஆகஸ்ட் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி நேர்காணல் நடத்தவுள்ளனர். 

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி விண்ணப்பித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டாம் மூடி இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பயிற்சியாளராக இருந்தார்.

விராட் கோலியின் ஆதரவு இருப்பதால் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, நியூசிலாந்தின் மைக் ஹெசன், இலங்கையின் ஜெயவர்த்தனே உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், முன்னாள் மேனேஜரும், ஜிம்பாப்வே அணியின் தற்போதைய பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விணப்பித்துள்ளனர்.