விளையாட்டு

‘ரெய்னா புறக்கணிக்கப்பட காரணம் தோனியின் விசுவாசத்தை இழந்ததே’ - நியூசி. முன்னாள் வீரர்

சங்கீதா

தோனியின் விசுவாசத்தை இழந்ததே, சுரேஷ் ரெய்னா 15-வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணியால் புறக்கணிக்கப்பட்டதற்கு காரணம் என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டௌல் கருத்து தெரிவித்துள்ளார்.

15-வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை வாங்குவதற்கான மெகா ஏலம் பெங்களூரில் வெற்றிக்கரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், 2021 டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இந்த ஏலத்தில் விலை போகாதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதிலும் இந்தியாவின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை, இந்த ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும் வாங்க முன்வராதது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏனெனில், கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர், எதிரணி பந்து வீச்சாளர்களின் பந்துகுளை அசால்ட்டாக சமாளித்து பல சாதனைகளை படைத்தார். இதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என்றும், சின்ன தல என்றும் அழைத்து வந்தார்கள். இருப்பினும் கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் மோசமான பார்மிலும் ரெய்னா இருந்து வருகிறார்.

எனினும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் நீண்ட காலமாக இடம் பிடித்திருந்த சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் பல வெற்றிகளில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார். குறைந்தபட்சம் அதற்காகவாவது அடிப்படை விலையில் அவரை எடுத்திருக்கலாம் என்று சென்னை ரசிகர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். ’மிஸ்யூ ரெய்னா’ என்று சமூகவலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.பி.எல். 2022 தொடரில் சென்னை அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை ஏன் வாங்கவில்லை என்ற உண்மையான காரணத்தை நியூசிலாந்தின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டௌல் கூறியுள்ளார். இதுபற்றி பிரபல கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு, “இதில் 2 – 3 பகுதிகள் அடங்கி உள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில், ரெய்னா தனது விசுவாசத்தை இழந்தார்.

அதற்கான காரணத்தைப் பற்றி விரிவாக பேச தேவையில்லை. ஏன் அப்படி நடந்தது என்றும் பேச தேவையில்லை. அந்தத் தருணத்தில் அவர் தனது விசுவாசத்தை எதனால் இழந்தார் என்பதை யூகிக்க பல காரணங்கள் உள்ளது. அவை அனைத்தையும் விட அந்த தருணத்தில் தோனியிடமும், அணியிடமும், அவர் தனது விசுவாசத்தை இழந்தார். அதுபோன்ற ஒரு செயலை நீங்கள் செய்தப் பின்னர், பெரும்பாலும் உங்களை மீண்டும் மனதார யாரும் வரவேற்க மாட்டார்கள். அத்துடன் அவர் தற்போது முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பதுடன் ஷார்ட் பால் பந்துகளுக்கு பயப்படுகிறார்.

சர்வதேச போட்டிகளில் நீண்ட நாட்கள் விளையாடாத ரெய்னா, அதிலும் உடற்தகுதி இல்லாத அவருக்கு அடிப்படை விலை மிக அதிகம். அதனால் அவ்வளவு பணத்தை செலவு செய்ய யாருமே தயங்குவார்கள். அடிப்படை விலை மிக அதிகம். அவர், ஐபிஎல்லில் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், முதல் 8-9 ஆண்டுகளில் முன்னணியாக விளங்கியவர், தற்போது பார்மில் இல்லை என்றால் யார் அவ்வளவு ஏலத்திற்கு எடுப்பார்கள்” என கூறியுள்ளார்.

சென்னை அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா, துபாயில் 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக சென்னை அணியை கைவிட்டு விட்டு திடீரென பாதியில் விலகியதால் அந்த சீசனில் சென்னை அணி வரலாற்றில் இல்லாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்தது. இறுதியில் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் அவமானத்தை சந்தித்த அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் முறையாக 7-வது இடத்தை பிடித்து மோசமான இடத்துக்கு தள்ளப்பட்டது.

அந்த தொடரில் சென்னை அணியுடன் பாதியிலாவது சுரேஷ் ரெய்னா இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரை அவர் அந்த தொடரை புறக்கணித்து விட்டார். கடந்த ஆண்டும் காயம் காரணமாகவும், மோசமான பார்ம் காரணமாகவும் ரெய்னா சில போட்டிகளில் விளையாடாமல் உட்கார வைக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தால், ஏற்கனவே அதிருப்தியில் இருந்த சென்னை அணி நிர்வாகம் சமீப காலங்களாக, அவர் மோசமான பார்மில் இருந்து வருவதை காரணம் காட்டி தற்போது அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என சைமன் டௌல் தெரிவித்துள்ளார்.