அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக, மும்பையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தேர்வாகியுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் சவுரப் நெட்ராவால்கர் (27). வேகப்பந்துவீச்சாளரான இவர், 2010-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் பந்துவீச்சில் அப்போது வீழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஹமது சேஷாத்.
பின்னர் ஒரே ஒரு ரஞ்சி போட்டியில் மட்டும் பங்கேற்ற அவர், படிப்பில் கவனம் செலுத்தினார். என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சென்றும் கிரிக்கெட் விளையாடுவதை விடவில்லை. சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஆறு மணி நேரம் பயணம் செய்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். இப்போது அவர் அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பெற்று உள்ளார்.
இதுபற்றி சவுரவ் கூறும்போது, ’மகிழ்ச்சியாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால், அலுவலகத்தில் இருந்து நண்பருடன் சீக்கிரமாக கிளம்பிவிடுவேன். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சனிக்கிழமை 50 ஓவர் போட்டியில் விளையாடுவேன்.
பிறகு அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து மறுநாள் 50 ஓவர் போட்டியில் பங்கேற்பேன். கிரிக்கெட்டுக்காக நிறைய உழைத்தேன். என்னை கண்காணித்த அமெரிக்க கிரிக்கெட் அமைப்பு எனக்கு கேப்டன் வாய்ப்பை ஜனவரி மாதம் அளித்திருக்கிறது. அமெரிக்காவில் இப்போது கிரிக்கெட் வளர்ந்து வருகிறது’ என்றார்.
அமெரிக்க கிரிக்கெட் அணியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இந்திய உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.