விளையாட்டு

தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!

webteam

தீரா பசிதான் தினேஷ் கார்த்திக்கின் இத்தனை வருட போராட்டத்தின் அடிநாதமாக இருந்தது. அதுதான் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கான இடத்தையும் பெற்று கொடுத்திருக்கிறது.

நடப்பு ஐ.பி.எல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில் அடுத்து வரவிருக்கும் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இந்திய அணிக்கான தேர்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த வீரரையெல்லாம் எதற்கு அணியில் எடுத்தீர்கள்? அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே? என கடுமையான விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றுக்கு மத்தியிலும் ஒரே ஒரு வீரரின் தேர்வில் மட்டும் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. அது தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கே.

வீரர்களின் பட்டியலில் அவரது பெயரை பார்த்தவுடன் அத்தனை பேருமே ஒரே மாதிரியாக கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிட்டனர். தினேஷ் கார்த்திக்கின் வெற்றியை தங்களின் வெற்றியாக நினைத்து உள்ளம் மகிழ வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு வரவேற்பிற்கும் கொண்டாட்டத்துக்கும் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர்களும் பவுண்டரிக்களும் மட்டுமே காரணமல்ல. அவரின் இத்தனை ஆண்டு கால போராட்டமும் வென்றே தீர வேண்டும் என அவரின் நெஞ்ச்சுக்குள் சலனமேயின்றி எரிந்துக் கொண்டிருக்கும் நெருப்பும்தான் அவரை கொண்டாட வைக்கிறது.

'2012 சமயத்தில் நான் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது இந்திய அணிக்காக கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே தினேஷ் கார்த்திக்கின் நோக்கமாக இருந்தது. ஒருநாள் வலைப்பயிற்சியில் 437 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். இன்றைக்கு இது போதும் என கூறினேன். ஆனால், தினேஷ் கார்த்திக் ஏற்கவில்லை. நான் இன்னும் திருப்தியடையவில்லை எனக் கூறி 709 பந்துகளை எதிர்கொண்டார். அந்த நீண்ட செஷனை முடித்துவிட்டு நாளை எப்போது வர வேண்டும் என கேட்டார்'

Performance Analyst ஆன பிரசன்னா தினேஷ் கார்த்திக் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு ட்வீட் செய்திருந்தார்.

இதுதான் தினேஷ் கார்த்திக். அவருக்கு 36 வயதாகிறது. தோனிக்கு முன்பே அணிக்கு வந்தவர். தோனியின் ஓடிஐ தொப்பி நம்பர் 158. தினேஷ் கார்த்திக்கின் ஓடிஐ தொப்பி நம்பர் 156. 158 என்கிற அந்த பல சகாப்தங்களை தனதாக்கி பெரும் புகழோடு தனக்கென தனி வரலாற்றை எழுதிக்கொண்டு ஓய்வே பெற்றுவிட்டது. ஆனால், 156 என்கிற அந்த நம்பர் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தன்னுடையை சகாப்தத்தை கட்டியெழுப்ப போராடிக் கொண்டிருக்கிறது. வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் மட்டுமல்ல. போராட்டங்களுக்குமே இங்கு தனி மதிப்புண்டு. தோனியின் இமாலய வளர்ச்சியில் தினேஷ் கார்த்திக் நியாயமாக எட்ட வேண்டிய உயரத்தை கூட அவரால் எட்ட முடியவில்லை.

'36 ங்றது ஸ்போர்ட்ஸ்ல ரிட்டயர்டு ஆகுற வயசு. உன் மனசுல சாதிக்குறதுக்கு தெம்பு இருந்தாலும் உடம்புல பலம் இருக்காது அர்ஜூன்' நானியின் ஜெர்சி படத்தில் இப்படி ஒரு வசனம் வரும். கிட்டத்தட்ட அந்த ஜெர்சி கதாபாத்திரமான அர்ஜூனோடு கூட தினேஷ் கார்த்திக்கை ஒப்பிடலாம். அர்ஜூனை போன்றே தினேஷ் கார்த்திக்கிற்கும் 36 வயதிலும் வென்றே தீர வேண்டும் என்கிற வெறி உழன்று கொண்டேதான் இருக்கிறது. நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் திருப்திப்பட்டுக் கொண்டு தன்னைத்தானே ஒடுக்கிக்கொள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. இப்போதும் இந்த 36 வயதிலும் ஒரு பெருங்கனவை கண்டு கொண்டிருக்கிறார்.

2004-க்கு முன் இந்திய அணிக்கு அறிமுகமாகும்போது அவருக்கு எவ்வளவு பெரும் பசி இருந்ததோ அதே பசிதான் 2012 இல் வலைப்பயிற்சியில் பந்துகளை எதிர்கொள்ளும் போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

'எனக்குனு ஒரு பெரிய இலக்கு இருக்கு. அதை நோக்கி கடினமா உழைக்குறேன். 2013-க்கு அப்புறம் இந்தியா ஐ.சி.சி தொடர் எதையும் ஜெயிக்கவே இல்ல. நான் எதாச்சு பண்ணனும்.  உலகக்கோப்பையை இந்தியா ஜெயிக்குறதுல என்னோட பங்கும் பெருமையளிக்குற வகையில இருக்கனும். அதற்காக இந்திய அணியில் இடம்பெறுவதற்காக என்னால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்'

இந்த சீசனில் பல போட்டிகளை சிறப்பாக முடித்துக் கொடுத்த பிறகு 36 வயதான தினேஷ் கார்த்திக் இப்படித்தான் தனது ஆவலை வெளிப்படுத்தியிருந்தார். இதை வெறும் வார்த்தைகளாக படித்தால் அதிலிருக்கும் கனத்தையும் வேட்கையையும் நம்மால் உணர முடியாது. வியர்வை சொட்ட சொட்ட கண்களில் ஏக்கத்தோடு உள்ளத்தில் பெரும் நம்பிக்கையோடு மைக்கை பிடித்து தினேஷ் கார்த்திக் பேசும் வீடியோவை பார்த்தால்தான் தேசத்திற்காக எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற அவரின் ஆவலை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.

தீரா பசிதான் தினேஷ் கார்த்திக்கின் இத்தனை வருட போராட்டத்தின் அடிநாதமாக இருந்தது. அதுதான் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கான இடத்தையும் பெற்று கொடுத்திருக்கிறது.

'உங்களை நீங்கள் நம்பினால் எல்லாம் தானாக நடக்கும். உங்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. தொடர்ந்து கடினமாக உழைப்பேன்' இந்திய அணி தேர்வு குறித்து அறிந்தவுடன் தினேஷ் கார்த்திக் இப்படி ட்வீட் செய்திருந்தார். வேறெதையும் விட உங்களை நம்புங்கள். உங்களின் உழைப்பை நம்புங்கள். அதுமட்டுமே உங்களுக்கு வேண்டியதை கொடுக்கும் என்பதே தினேஷ் கார்த்திக் சொல்லும் மெசேஜ்!

தினேஷ் கார்த்திக்கின் பசிக்கு உலகக்கோப்பை மட்டும்தான் சரியான தீனியாக இருக்கும். 2022 டி20 உலகக்கோப்பைக்கும் அவர் வர வேண்டும். 2011 உலகக் கோப்பையில் தோனி ஒரு சிக்சர் அடித்தாரே! அது ஒரு வரலாறாக மாறி நிற்கிறதே!  அதே போல தினேஷ் கார்த்திக்கும் ஒரு சிக்சர் அடித்து இந்தியாவின் உலகக்கோப்பை ஏக்கத்தை தீர்த்து வைக்க வேண்டும். அதுவும் வரலாறாக மாற வேண்டும்.

Come On DK!!

- உ.ஸ்ரீராம்