தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லான்வாமோ சோசோபே மதுபான பாரில் டிஜே-வாக பணியாற்றிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லான்வாமோ சோசோபே. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியிலேயே 4 விக்கெட் வீழ்த்தி பாராட்டைப் பெற்றவர். மிகக் குறைவான போட்டிகளிலேயே ஐம்பது விக்கெட்டை கைப்பற்றிய இவர், அப்போது தரவரிசையில், நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருந்தார்.
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உள்ளூர் டி20 போட்டியான ராம் ஸ்லாம் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவரை 8 வருடம் தடை செய்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். கடந்த ஆண்டு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கிரிக்கெட்டை விட்டுவிட்ட இவர், மதுபான பாரில் டிஜே ஆகியிருக்கிறார்.
‘இசை எனக்கு பிடிக்கும். டிஜே ஆனதில் எனக்கு விருப்பம்தான். லோக்கல் மதுபான பார்களில் என்னை டிஜே ஆக பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. நான் வீழ்ந்துவிட்டதாக சிலர் நினைக்கலாம். ஆனால், நான் விழமாட்டேன்’ என்கிறார் சோசோபே.
தென்னாப்பிரிக்காவுக்காக, 61 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.