விளையாட்டு

வியக்க வைக்கும் தந்திரம் : பென் ஸ்டோக்ஸ் எடுத்த டைமிங் முடிவு..!

வியக்க வைக்கும் தந்திரம் : பென் ஸ்டோக்ஸ் எடுத்த டைமிங் முடிவு..!

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற 2வது டெஸ்ட்டின் வெற்றியில் பென் ஸ்டோக்ஸ் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் சமயத்திற்கு தகுந்தவாறு சாமர்த்திய முடிவுகளை எடுப்பவர்களே ரசிகர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்துவிடுகின்றனர். இந்த வித்தையை நன்கு அறிந்தவர் தோனி. இதனால் தான் அவர் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். தற்போது இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸும் இதேபோன்று அனைவரையும் வியக்க வைக்கும் சில சாதுர்ய மற்றும் அதிரடி முடிவுகளை எடுத்து, அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக இருந்த பென் ஸ்டோக்ஸ் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர் அனைவராலும் கவனிக்கத்தக்க நபராக மாறிவிட்டார். உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே அவுட் ஆகி சென்றபோது களமிறங்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 98 பந்துகளை சந்தித்து 84 ரன்களை குவித்தார். இறுதி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்த அவர் போட்டியை சமன் செய்தார். கண்டிப்பாக இங்கிலாந்து அணி தோற்றுவிடும் என நினைத்த அனைவரும் பென் ஸ்டோக்ஸின் திறமையை கண்டு வாயடைத்துப் போயினர். பின்னர் சூப்பர் ஓவர், பவுண்டரி ரூல்ஸ் என இங்கிலாந்து கோப்பையை வென்றது. அன்று முதல் இங்கிலாந்தில் பெரும் ரசிகர் பட்டாளம் ஸ்டோக்ஸ்க்கு கிடைத்துவிட்டனர்.

அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ் எடுக்கும் முடிவுகளும் கிரிக்கெட்டில் அவர் காட்டும் வித்தைகளும் வியக்க வைக்கிறது. தற்போது கூட முதல் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்ற இங்கிலாந்து அணியை,தனது முயற்சியால் ஸ்டோக்ஸ் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 469 ரன்களை குவித்தது. இதில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் 176 (356) ரன்களை குவித்தார். பின்னர் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 287 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி தொடக்க வீரர் பிராத்வொயிட்டை பென் ஸ்டோக்ஸ் தனது பந்துவீச்சில் கேச் அண்ட் போல்ட் செய்தார்.

இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரில் இறங்கிய கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டெஸ்ட் போட்டியில் அதிரடியை வெளிப்படுத்த இறங்கிய இந்த ஜோடியில், பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பட்லர் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனே விளையாட முடியாத அளவிற்கு வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சு இருந்தது. ஆனால் அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் டி20 போட்டி போல 57 பந்துகளில் 78 ரன்களை விளாசினார். அதுமட்டுமின்றி தான் நல்ல அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோதே, இங்கிலாந்து அணி 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட்டிங்கை டிக்ளர் செய்தார்.

இதனால் 312 ரன்களை ஒரே நாளில் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தள்ளப்பட்டது. 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார். 14 ஓவர்கள் பந்துவீசிய அவர் 30 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இதனால் அவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பேட்டிங்கில் சதம், அரை சதம் என அடித்ததுடன், பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் டிக்ளர் செய்து சாதுர்ய முடிவையும் எடுத்து ரசிகர்களை ஸ்டோக்ஸ் கொண்டாட வைத்துள்ளார். ஸ்டோக்ஸின் இந்த விளையாட்டு நுணுக்க கணிப்புகள், அவரை வருங்காலத்தில் நல்ல கேப்டனாக உருவாக்கலாம். தற்போது டெஸ்ட் போட்டியின் கேப்டனாக ரூட் இருந்தாலும் களத்தில் ஸ்டோக்ஸ் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.