இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி, இப்போது 3 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் தொடரில் ஆடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் 2-வது ஒரு நாள் போட்டி கவுகாத்தி யில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முத லில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய மகளிர் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்தது.
அதிகப்பட்சமாக மிதாலி ராஜ் 27 பந்துகளை சந்தித்து 20 ரன் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் கேத்தரின் ப்ரன்ட் 3 விக்கெட்டையும் லின்ஸே ஸ்மித் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேமி பியோமென்ட் 8 ரன்னில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேனியல் வியாட் அபாரமாக ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் அந்த அணி, 19.1 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வியாட் 55 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக நின்ற லாரன் வின்ஃபீல்ட் 29 ரன்கள் எடுத்தார்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணி தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது டி20 போட்டி இதே மைதானத்தில் சனிக்கிழமை நடக்கிறது.