விளையாட்டு

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் - மலிங்கா சாதனை

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் - மலிங்கா சாதனை

rajakannan

உ‌லகக்கோ‌ப்‌பை வரலாற்றில், குறைந்த போட்டி‌களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இலங்கை வீரர் மலிங்கா படைத்துள்ளார். 

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து அசத்தினார். பெர்னாண்டோ 49, மெண்டீஸ் 46 ரன்கள் எடுத்தனர். ஆர்ச்சர், உட்ஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

இதனையடுத்து, 233 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பேரிஸ்டோவ் மலிங்கா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். வின்ஸனையும் 14 ரன்னில் வெளியேற்றினார் மலிங்கா. சற்று நேரம் தாக்குப்பிடித்த மோர்கன் 21 ரன்னில் உடனா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். 

அரைசதம் அடித்து விளையாடிய ரூட்டை(57) ரன்னில் சாய்த்தார் மலிங்கா. அத்தோடு, பட்லரையும் 10 ரன்னில் ஆட்டமிழக்க செய்தார். இங்கிலாந்து அணி 35 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணி இன்னும் 15 ஓவர்களுக்கு 82 ரன் எடுக்க வேண்டியுள்ளது. ஸ்டோக்ஸ் 43 ரன் எடுத்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில், உ‌லகக்கோ‌ப்‌பை வரலாற்றில், குறைந்த போட்டி‌களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை மலிங்கா படைத்துள்ளார். அவர், இங்கிலாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போது இந்தச் சாதனையைத் தன்வசப் படுத்தினார். 

25 போட்டிகளில் அவர் இச்சாதனையை எட்டியுள்ளார். 30 போட்டிகளில் மெக்ராத், முத்தையா முரளிதரன், வாசிம் அக்ரம் ஆகிய வீரர்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.