விளையாட்டு

சதம் அடித்து பாகிஸ்தானை மிரட்டிய ‘ரூட்’ : இலக்கை நெருங்கும் இங்கிலாந்து

சதம் அடித்து பாகிஸ்தானை மிரட்டிய ‘ரூட்’ : இலக்கை நெருங்கும் இங்கிலாந்து

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் அடித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் ஸமான் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 36 (40) ரன்களில் ஸமான் ஆட்டமிழக்க, இமாம் 44 (58) ரன்களில் அவுட் ஆகினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அசாம் மற்றும் ஹாஃபீஸ், அணியின் ரன்களை உயர்த்தினர். 

அரை சதம் அடித்த அசாம் 63 (66) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹாஃபீஸ் அதிரடியாக 84 (62) ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் சர்ஃப்ராஸ் 55 (44) ரன்களில் விக்கெட்டை இழக்க, 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 348 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தில் மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

இதையடுத்து 349 என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 8 (7) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த ரூட் விக்கெட்டை பறிகொடுக்காமல் பேட்டிங் செய்தார். ஆனால் பேரிஸ்டோவ் 32 (31) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் இயான் மார்கனும் 9 (18) ரன்களில் அவுட் ஆக, அடுத்ததாக வந்த பென் ஸ்டோக்ஸ் 13 (18) ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதனால் இங்கிலாந்து அணி தடுமாற்றம் அடைந்தது. அதன்பின், கீப்பர் பட்லருடன் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் அபார பேட்டிங் செய்து சதம் அடித்தார். மறுமுனையில் பட்லர் அனல் பறக்க விளையாடினார். 107 (104) ரன்கள் எடுத்த நிலையில் ரூட் அவுட் ஆகினார். இருப்பினும் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்களை கடந்து இலக்கை நெருங்கி வருகிறது.