விளையாட்டு

பாகிஸ்தான் அதிரடி பேட்டிங் : இங்கிலாந்துக்கு 349 ரன்கள் இலக்கு

webteam

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 348 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் ஸமான் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ரன்கள் 82 இருக்கும் போது, 36 (40) ரன்களில் ஸமான் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாபர் அசாமுடன் சேர்ந்து விளையாடிய இமாம் 44 (58) ரன்களில் அவுட் ஆகினார். 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அசாம் மற்றும் ஹாஃபீஸ், அணியின் ரன்களை உயர்த்தினர். அரை சதம் அடித்த அசாம் 63 (66) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து விளையாடிய ஹாஃபீஸ் அதிரடியாக 84 (62) ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் சர்ஃப்ராஸ் அரை சதம் எடுத்து 55 (44) ரன்களில் விக்கெட்டை இழந்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 348 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தில் அபாரமாக பந்துவீசிய ஆல்ரவுண்டர் மொயின் அலி தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதி நேரத்தில் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதற்கிடையே மார்க் உட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.