உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடக்கும்போட்டியில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கும் 32 வது லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
ஆஸ்திரேலிய அணி, 6 போட்டிகளில் விளையாடி, 5-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியுடன் தோல்வியை தழுவியைத் தழுவியுள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவானதாக இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஸ்மித், கவாஜா, மேக்ஸ்வெல், விக்கெட் கீப்பர் கேரி உட்பட அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில், ஸ்டார்க், கம்மின்ஸ், கோல்டர் நைல் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். சுழல் பந்துவீச்சுக்கு ஜம்பா இருக்கிறார்.
ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்தது. இதனால் அடுத்து சந்திக்கும் 3 போட்டிகளில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் மோர்கன், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர் அதிரடியில் மிரட்டுகிறார்கள். பந்துவீச்சில், மார்க் வுட், ஆர்ச்சர், ரஷித் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. உலகக் கோப்பை யில் 1992 ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியை, இங்கிலாந்து வென்றதில்லை. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், 27 வருட போராட்டத்துக்கு முடிவாக அமையும்.
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் போல, பரபரப்பான இந்தப் போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. போட்டி நடக்கு ம் லண்டனில், இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், போட்டி பாதிக்கப்படலாம்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 147 முறை நேருக்கு நேர் சந்தித்து, ஆஸ்திரேலிய அணி 81 போட்டிகளிலும், இங்கிலாந்து 61 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் 3 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் கைவிடப்பட்டுள்ளன.